ஐபிஎல் 2022: மும்பை உடனான வெற்றி குறித்து ஸ்ரேயாஸ் ஐயர்!
மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் முக்கியமான லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தோற்கடித்தது. முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் சேர்த்தது.
166 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 113 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வி அடைந்தது. இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்கள் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும், ரஸல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வெற்றிக்கு துணையாகினர்.
இந்த வெற்றி மூலம் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 12 போட்டிகளில் 5 வெற்றிகள் 10 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் இருக்கிறது. ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பையும் உயிர்ப்புடன் வைத்துக்கொண்டது கொல்கத்தா அணி. அடுத்துவரும் 2 ஆட்டங்களையும் கொல்கத்தா அணி கட்டாயம் வெல்வது அவசியமாகும்.
இந்த ஆட்டத்தில் வெற்றிக்குப்பின் பேசிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், “அணியில் ப்ளேயிங் லெவனைத் தேர்வு செய்வது கடினமானதாக இருந்தது. ஏனென்றால், ஐபிஎல் தொடங்கும்போதே நானும்கூட அந்த நிலையில்தான் இருந்தேன்.
பயிற்சியாளர்களுடன் ஆலோசித்தோம், அணித் தேர்வில் சிஇஓ வெங்கியும் சேர்ந்துதான் அணியைத் தேர்வு செய்தார். பயிற்சியாளர் மெக்கல்லம் அணி வீரர்களிடம் தனிப்பட்ட முறையில் சென்று ப்ளேயிங் லெவன்பற்றி தெரிவித்தார்.
சகவீரர்களிடம் சென்று நீங்கள் ப்ளேயிங் லெவனில் இல்லை என்றஉ நான் எவ்வாறு கூறுவது என தெரியவில்லை. ஆனால்,சூழலைப்புரிந்து கொண்டு வீரர்கள் ஆதரவாக இருந்தார்கள். கேப்டனாக இருப்பதிலும் இன்றைய ஆட்டத்தில் நாங்கள் விளையாடியவிதமும் பெருமையாக இருக்கிறது.
இதற்கு முன் நடந்த போட்டிகளில் நாங்கள் தோல்வி அடைந்திருக்கிறோம், கடந்த போட்டியில்கூட தோல்வி அடைந்தோம். மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் தோற்றாலும் மீண்டும் திரும்ப வந்திருக்கிறோம், மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் மும்பை அணியை வென்றிருக்கிறோம்.
இதைதான் எதிர்பார்த்திருந்தோம், இது எனக்கு மனநிறைவை அளிக்கிறது. பவர்ப்ளேயில் நல்ல தொடக்கம் கிடைத்தது, நிதிஷ் ராணாவும் ரன்களை வேகமாக ஸ்கோர் செய்தார். பொலார்ட் ஓவரில் ராணா அடித்த சிக்ஸர்கள் அருமையானது” என தெரிவித்தார்.