டி20 உலகக்கோப்பை தொடருக்கு முதல் முறையாக தகுதிப்பெற்று இத்தாலி அணி சாதனை!
எதிவரும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஐரோப்பிய தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 10ஆவது லீக் போட்டியில் நெதர்லாந்து மற்றும் இத்தாலி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இத்தாலி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக பென் மனெட்டி 30 ரன்களையும், ஸ்டூவர்ட் 25 ரன்களையும் சேர்த்தனர். நெதர்லாந்து தரப்பில் வாண்டர் மெர்வ் 3 விக்கெட்டுகளையும், கைல் கெலின் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய நெதர்லாந்து அணியில் மைக்கேல் லெவ்விட் 34 ரன்களில் ஆட்டமிழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மேக்ஸ் ஓடவுட் 47 ரன்களையும், ஸ்காட் எட்வர்ட்ஸ் 37 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.
இதன்மூலம் நெதர்லாந்து அணி 16.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் இத்தாலி அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் நெதர்லாந்து அணி நேரடியாக அடுத்த ஆண்டு நடைபெறும் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னேறியது. அதேசமயம் இப்போட்டியில் இத்தாலி அணி தோல்வியைத் தழுவிய நிலையிலும் ரன் ரேட் அடிப்படையில் டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
முன்னதாக நடைபெற்ற 9ஆவது லீக் போட்டியில் ஸ்காட்லாந்து மற்றும் ஜெர்சி அணிகள் பலப்பரீட்சை நடத்தி இருந்தன. இதில் முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்களை மட்டுமே சேர்த்தது. அதன்பின் இலக்கை நோக்கி விளையடிய ஜெர்ஸி அணி 20 ஓவர்கள் முடிவில் இலக்கை எட்டியதுடன் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
Also Read: LIVE Cricket Score
இப்போட்டியில் ஸ்காட்லாந்து அணி தோல்வியைத் தழுவியதன் மூலம் அந்த அணி விளையாடிய 4 போட்டிகளில் ஒரு வெற்றி இரண்டு தோல்வி மற்றும் ஒரு முடிவில்லை என மொத்தமாக 3 புள்ளிகளை மட்டுமே எடுத்திருந்தது. மறுபக்கம் இத்தாலி அணி விளையாடிய 4 போட்டிகளில் 2 வெற்றி, ஒரு தோல்வி மற்றும் ஒரு முடிவில்லை என 5 புள்ளிகளை பெற்றதன் மூலம் எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதிப்பெற்று அசத்தியுள்ளது.