நானும் ரோகித்தும் இணைந்து வழிநடத்த முயற்சி செய்கிறோம் - விராட் கோலி!
இந்திய கிரிக்கெட்டில் தற்போது மிக முக்கிய மூத்த வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ரன் மெஷின் விராட் கோலி இருவரும் இருந்து வருகிறார்கள். இதில் விராட் கோலியை விட ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானதில் சீனியர். ஆனால் இந்திய அணியின் நட்சத்திர வீரராக முதலில் உருவெடுத்தவர் விராட் கோலி.
ரோஹித் சர்மாவின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை ஏற்றத்தாழ்வு நிறைந்ததாகவே 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை வரை இருந்து வந்தது. அந்த குறிப்பிட்ட தொடரில் மகேந்திர சிங் தோனி அவரை தொடக்க வீரராக கொண்டு வந்தார். அங்கிருந்துதான் ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் வாழ்க்கை மாறியது. ஆரம்ப காலக்கட்டத்தில் மூத்த வீரர்கள் நிரம்பி இருந்த அணியில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவே நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள்.
பிறகு இவர்கள் இருவரும் வளர வளர இவர்களது நட்பை வெளியில்பார்க்க முடியவில்லை. மேலும் கேப்டன்சி விவகாரத்தில் விரும்பத்தகாத சில நிகழ்வுகள் நடைபெற்று விராட் கோலி விலகிக் கொண்டார். அவருடைய இடத்தில் ரோஹித் சர்மா கொண்டுவரப்பட்டார். இது இவர்களுக்கு உள்ளான நட்பு குறித்து வெளியில் நிறைய கேள்விகளை சந்தேகங்களை எழுப்பியது.
தற்பொழுது முதல் முறையாக விராட் கோலி தனக்கும் ரோஹித் சர்மாவுக்கும் இருக்கும் நட்பு குறித்து பேசுகையில், “எங்களுடைய ஓய்வறையில் உள்ள சூழல் மிகவும் அருமையாக இருக்கிறது. அணியில் உள்ள நல்ல நட்புறவு காரணமாக நாங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து விளையாட விரும்புகிறோம். இப்படியான சூழ்நிலையால் அணிக்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறோம்.
எங்கள் இருவருக்கும் இடையே நிறைய உரையாடல்கள் உண்டு. நான் என்னிடம் இருக்கும் யோசனைகளை அவரிடம் கூறுகிறேன். அதே சமயத்தில் ரோஹித் சர்மா என்னிடம் எதையும் விவாதிக்க முடியும். இது இருவருக்கும் மிக சுதந்திரமான உணர்வாக அமைந்திருக்கிறது. இது முழுக்க அணியின் வெற்றி குறித்த இலக்கு நோக்கி அமைந்திருக்கிறது.
எங்களுடைய மொத்த வீரர்களும் முழு அணியாக இணைந்து இருக்கிறார்கள். அதே சமயத்தில் நிதானத்துடனும் நம்பிக்கையுடனும் இருக்கிறார்கள். இப்பொழுது அழுத்தத்தை எவ்வாறு கையாள்வது என்பதுதான் முக்கியம். இந்த விஷயத்தில் நானும் ரோகித்தும் இணைந்து வழிநடத்த முயற்சி செய்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.