இது இளம் வீரர்களுக்கு நல்ல அனுபவத்தை தரும் என்று நினைக்கிறேன் - சூர்யகுமார் யாதவ்!

Updated: Wed, Dec 13 2023 11:05 IST
இது இளம் வீரர்களுக்கு நல்ல அனுபவத்தை தரும் என்று நினைக்கிறேன் - சூர்யகுமார் யாதவ்! (Image Source: Google)

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது டிசம்பர் 12-ஆம் தேதி நேற்று செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணியானது முதலில் தங்களது அணி பந்துவீசும் என்று அறிவித்தது. இதைத்தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணியானது 19.3 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் குவித்திருந்த வேளையில் மழை குறுக்கிட்டது.

அதன் பின்னர் மழை நிற்க சற்று நேரம் பிடித்ததால் அங்கேயே இந்திய அணியின் பேட்டிங் நிறுத்தப்பட்டது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ரிங்கு சிங் 68 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 56 ரன்களையும் குவித்திருந்தனர். பின்னர் மழை காரணமாக 15 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த போட்டியில் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி தென் ஆப்பிரிக்க அணி 152 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து இந்த இலக்கினை எதிர்த்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியானது 13.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் சார்பாக துவக்க வீரர் ரீஸா ஹென்ட்ரிக்ஸ் 49 ரன்களையும், மார்க்ரம் 30 ரன்களையும் குவித்து அசத்தினர்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய சூர்யகுமார் யாதவ், “முதல் பாதி முடிந்ததும் இந்த ரன்கள் வெற்றிக்கு போதுமானது என்றே நினைத்தோம். ஆனால் தென் ஆப்பிரிக்க அணியின் வீரர்கள் முதல் 5-6 ஓவர்களிலேயே மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எங்களிடம் இருந்து ஆட்டத்தை பறித்து விட்டனர்.

இந்த போட்டியில் நாங்கள் விளையாடிய விதம் உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. பயமற்ற இயல்பான ஆட்டத்தையே வெளிப்படுத்த வேண்டும் என்று தான் எங்களது அணி வீரர்களிடம் கூறிக் கொண்டே இருந்தேன். மேலும் போட்டியின் சூழல் எவ்வாறு இருந்தாலும் களத்திற்கு சென்று நமது திறமையை காண்பிக்க வேண்டும் என்பது மட்டுமே நான் எங்களது வீரர்களிடம் கூறிக் கொண்டே இருந்தேன்.

அந்த வகையில் இந்த போட்டியில் நமது அணியின் வீரர்கள் மிகச் சிறப்பாகவே செயல்பட்டனர். அதோடு இரண்டாம் பாதியில் பந்து ஈரமாக இருந்ததால் கிரிப் செய்ய முடியவில்லை. இது போன்ற வெளிநாட்டு சூழலில் விளையாடுவது இளம்வீரர்களுக்கு நல்ல அனுபவத்தை தரும் என்று நினைக்கிறேன். அடுத்த போட்டிக்காக காத்திருக்கிறோம்” என கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை