கடைசி வரை நின்று விளையாட வேண்டும் என்பதே திட்டமாக இருந்தது - விராட் கோலி!

Updated: Sat, Apr 06 2024 22:34 IST
கடைசி வரை நின்று விளையாட வேண்டும் என்பதே திட்டமாக இருந்தது - விராட் கோலி! (Image Source: Google)

ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியிக் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணிக்கு விராட் கோலி மற்றும் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்ததுடன் முதல் விக்கெட்டிற்கு 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். 

இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் டூ பிளெசிஸ் 44 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல், சௌர்வ் சௌகான் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு தங்களது விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இருப்பினும் இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி ஐபிஎல் தொடரில் தனது 8ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோலி 12 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 113 ரன்களைச் சேர்க்க, 20 ஓவர்கள் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 3 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்களைக் குவித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய யுஸ்வேந்திர சஹால் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இந்நிலையில் இப்போட்டி இடைவேளையின் போது பேசிய விராட் கோலி, “இந்த மைதானத்தில் உள்ள பிட்ச் வெளியில் இருந்து பார்ப்பதற்கு தட்டையாக அதிக ரன்களை அடிக்க கூடிய ஒன்றாகவும் தெரிகிறது. ஆனால் களத்திற்குள் விளையாடும் போது பந்து கொஞ்சம் நின்று வருகிறது. குறிப்பாக ஸ்லோயர் பால்கள் நன்றாக நின்று வருகின்றன. அப்போது தான் பந்தின் வேகம் குறைந்து வருவதை உணர முடிந்தது.

இப்போட்டியைப் பொறுத்த வரையில் நான் மற்றும் ஃபாஃப் டூ பிளெசிஸ் இருவரில் ஒருவர் கடைசி வரை நின்று பேட்டிங் செய்ய வேண்டும் என்பதே திட்டமாக இருந்தது. இந்த ஸ்கோர் நிச்சயம் எங்களுக்கு வெற்றியைத் தேடிக்கொடுக்கும் என்று நினைக்கிறேன். இப்போட்டியில் களமிறங்குவதற்கு முன் என்னிடம் எந்தவொரு முன்முயற்சிகள் ஏதும் இல்லை. பந்து வீச்சாளர்களை யூகித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக, என்னால் ஆக்ரோஷமாக விளையாட முடியாது என்று எனக்குத் தெரியும்.

இது வெறும் மைதனத்தின் தன்மையைப் பொறுத்து விளையாடும் என்னுடைய அனுபவமாகும். இந்த பிட்சில் பனிப்பொழிவு இருந்தாலும், கொஞ்சம் உலர்வாகவே உள்ளது. அதனால்  நிச்சயம் பேட்டிங் செய்வதற்கு எளிதாக இருக்காது. அஸ்வினின் பந்திற்கு கீழ் சென்று விளையாட முடியவில்லை. அதனால் மிட் விக்கெட் திசையில் ஷாட்கள் அடிப்பது கடினம். அதனால் மைதானத்தில் நேர் திசையில் தான் விளையாட வேண்டிய நிலை இருந்தது” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை