இது எனது கெரியரின் கடைசி கட்டம் - எம் எஸ் தோனி!

Updated: Sat, Apr 22 2023 12:01 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனில் நேற்று நடைபெற்ற 29ஆவது லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்கு அபிஷேக் சர்மா 34 ரன்கள் எடுக்க மற்ற யாரும் சரியாக விளையாடாத காரணத்தால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 134 ரன்கள் மட்டுமே கிடைத்தது. ஜடேஜா நான்கு ஓவர்களுக்கு 22 ரன்கள் தந்து மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

தொடர்ந்து விளையாடிய சென்னை அணிக்கு ருத்ராஜ் – கான்வே ஜோடி முதல் விக்கட்டுக்கு 87 ரன்கள் தந்தது. கான்வே இறுதிவரை ஆட்டம் இழக்காமல் 57 பந்தில் 77 ரன்கள் எடுக்க 18. 4 ஓவர்களில் சென்னை அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி ஏழாவது ஆட்டத்தில் நான்காவது வெற்றியை பதிவு செய்தது.

வெற்றிக்குப் பிறகு பேசிய சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, “இது எனது கேரியரின் கடைசி கட்டம். நான் இங்கு எவ்வளவு நேரம் விளையாடினாலும் அதைப்பற்றி பொருட்படுத்தாமல் கடந்த இரண்டு வருடங்களில் மக்கள் தொடர்ந்து வந்து பார்க்கிறார்கள். இங்கு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மக்கள் எங்களுக்கு நிறைய பாசத்தையும் அன்பையும் தருகிறார்கள். நான் பேட்டிங் செய்ய நிறைய வாய்ப்புகள் இல்லாத பொழுதும் அதற்காக எந்த புகார்களும் அவர்களிடம் இல்லை.

நான் இரண்டாவது பேட்டிங் செய்ய தயங்கினேன். ஏனென்றால் பனி அதிகம் இல்லை. பனிப்பொழிவுக்கான வாய்ப்புகள் இருக்கும் பொழுது நீங்கள் இரண்டாவது பேட் செய்ய வேண்டும். ஆட்டத்தில் சுழற் பந்துவீச்சாளர்கள் உள்ளே வந்தவுடன் சரியான லைன் அண்ட் லென்த்தில் வீசினார்கள். வேகப்பந்துவீச்சாளர்கள் திரும்பி வரும் பொழுதும் நன்றாக இருந்தது குறிப்பாக பதிரனா சிறப்பாக வீசினார்” என்று கூறியிருக்கிறார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை