விராட் கோலி இல்லாமல் இந்திய அணி உலக கோப்பைக்கு செல்லாது - கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. அதன்படி ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கும் இத்தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கவுள்ளன. இதனால் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. அதேசமயம் இத்தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை ரோஹித் சர்மா வழிநடத்தவுள்ளார்.
இந்நிலையில் வரவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலிக்கு இடமில்லை என்ற செய்திகள் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது. அதன்படி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் உள்ள மைதானங்கள் மிகவும் மொதுவான விக்கெட்டுகளாக இருக்கும் என்பதால், அங்கு விராட் கோலியால் பெரிதளவில் சோபிக்க முடியாது என்றும், இதனால் அவரை டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணியிலிருந்து அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வு குழு நீக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ள விராட் கோலி, இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடுவார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துள்ள நிலையில், அவர் தொடரிலிருந்தே நீக்கப்படுவார் என வெளியாகியுள்ள தகவல் இந்திய ரசிகர்களுக்கு பெரும் இடியாக அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த தகவலை முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் மறுத்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “நடப்பு ஆண்டு ஐசிசி டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்பே கிடையாது. 2022ஆம் ஆண்டு அவர்தான் இந்தியாவை அரையிறுதி சுற்றுக்கு அழைத்துச் சென்றவர். அவர்தான் அத்தொடருக்கான தொடர் நாயகன் விருதை வென்றவர். அவர் அணியில் இடம்பிடிக்க மாட்டார் என்பதை எல்லாம் யார் சொல்வது? இப்படியான வதந்திகளை யார் பரப்புவது? இதற்கெல்லாம் என்ன அடிப்படை இருக்கிறது? டி20 உலக கோப்பையை இந்தியா வெல்ல வேண்டும் என்றால் விராட் கோலி நிச்சயம் அணியில் இருக்க வேண்டும்.
ஏனெனில் களத்தில் நின்று விளையாடும் ஒரு பேட்ஸ்மேன் நமக்கு தேவை. ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையோ அல்லது டி20 உலக கோப்பையோ, யாரேனும் ஒரு வீரர் களத்தில் நின்று விளையாட வேண்டும். விராட் கோலி இல்லாமல் இந்திய அணி உலக கோப்பைக்கு செல்லாது. விராட் கோலி 100 சதவீதம் அணியில் கண்டிப்பாக இருப்பார். 2011ஆம் ஆண்டு உலக கோப்பையில் சச்சின் எப்படி இருந்தாரோ விராட் கோலியும் அப்படி இருக்க வேண்டும். சச்சினுக்கு நடந்தது விராட் கோலிக்கும் நடக்க வேண்டும். அவர் உலகக் கோப்பையை வென்றால் மிகப் பெரிய விஷயமாக அமையும்” என்று தெரிவித்துள்ளார்.