இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான 2ஆவது ஒருநாள் போட்டி ராஞ்சியில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, தென் ஆப்பிரிக்கா அணி முதலில் களமிறங்கியது. டி காக் 5 ரன்னில் அவுட்டானார். மலான் 25 ரன்னில் ஆட்டமிழந்தார். ஹென்ரிக்சுடன் ஜோடி சேர்ந்த மார்க்ரம் பொறுப்புடன் விளையாடினார். இருவரும் அரை சதம் கடந்தனர்.
இதனால் 3ஆவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 129 ரன்கள் சேர்த்தது. ஹென்ரிக்ஸ் 74 ரன்னிலும், கிளாசன் 30 ரன்னிலும், மார்கிராம் 79 ரன்னிலும், பார்னெல் 16 ரன்னிலும் அவுட்டாகினர்.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 278 ரன்களை எடுத்துள்ளது. டேவிட் மில்லர் 35 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.இந்தியா சார்பில் சிராஜ் 3 விக்கெட்டும், ஷபாஸ் அகமது, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்குர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ஷிகர் தவான் 13 ரன்களிலும், ஷுப்மன் கில் 28 ரன்களோடும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் - இஷான் கிஷான் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடக்க, இருவரது பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களைத் தாண்டியது.
பின்னர் சொந்த மண்ணில் சதமடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இஷான் கிஷான் 84 பந்துகளில் 7 சிக்சர், 4 பவுண்டரிகள் என 93 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்து, 7 ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார்.
அதேசமயம் மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஸ்ரேயாஸ் ஐயர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தியதோடு, இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கும் பங்காற்றினார்.
இதன்மூலம் இந்திய அணி 45.5 ஓவர்களில் இலக்கை எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் 113 ரன்களையும், சஞ்சு சாம்சன் 30 ரன்களுடனும் களத்தில் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 1-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை சமன்செய்துள்ளது.