ENG vs IND, 5th Test: புதிய சாதனை நிகழ்த்திய பந்த் - ஜடேஜா!
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையே கடந்த ஆண்டில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதில் முதல் 4 போட்டிகள் நடந்து முடிந்து, இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்து நிலையில், கடைசிப் போட்டி கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
அந்த எஞ்சிய ஒரு போட்டிதான் நேற்று துவங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. ரோஹித் சர்மாவுக்கு பதில் பும்ரா கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
முதலில் களமிறங்கியுள்ள இந்திய அணியில் முதல் வரிசை பேட்டர்கள் சிறப்பாக செயல்படவில்லை. ஓபனர்கள் ஷுப்மன் கில் 17 (24), சேத்தஸ்வர் புஜாரா 13 (46) ஆகியோர் பெரிய ஸ்கோர் அடிக்காமல் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து, தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த ஹனுமா விஹாரியும் 20 (53) சொதப்பலாக விளையாடி நடையைக் கட்டினார்.
இந்நிலையில் விராட் கோலி 11 (19), ஷ்ரேயஸ் ஐயர் 15 (11) ஆகியோரும் ஏமாற்றியதால் ரசிகர்கள் கவலையுடன் அமர்ந்திருந்தனர். இந்தியாவும் 98/5 எனத் திணறியது.
அந்த சமயத்தில் ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா ஆகிய இடது கை பேட்டர்கள் பார்டனர்ஷிப் அமைக்க ஆரம்பித்தார்கள். இருவரும் அடிக்கடி ரன் அடித்ததால், இந்தியாவின் ஸ்கோர் தொடர்ந்து உயர ஆரம்பித்தது. இந்த பார்ட்னர்ஷுப்பும் 100+ ரன்களை கடந்தது.
இறுதியில் ரிஷப் பந்த் 89 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். இதன்மூலம், இந்திய அணிக்காக வெளிநாட்டு மண்ணில் அதிக சதம் (4) அடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற வரலாற்றுச் சாதனையை ரிஷப் படைத்தார். இதற்குமுன் விஜய் மஞ்சுரேக்கர், அஜஸ் ரட்ரா, விருத்திமான் சாஹா ஆகியோர் தலா மூன்று சதங்களை அடித்திருந்தார்கள். இறுதியில் ரிஷப் பந்த் 111 பந்துகளில் 20 பவுண்டரி, 4 பவுண்டரிகளுடன் 146 ரன்களை குவித்து அசத்தினார்.
இதனைத் தொடர்ந்து ரவீந்திர ஜடேஜாவும் சிறப்பாக விளையடி 183 பந்நுகளில் 13 பவுண்டரிகளுடன் சதம் எடுத்து அசத்தினார். ஐபிஎலில் மோசமான பார்மில் இருந்த ஜடேஜா, டெஸ்டில் தான் யார் என்று நிரூபித்திருப்பதுதான் ஹைலைட்.
மேலும், 2007ஆம் ஆண்டிற்கு பிறகு இரண்டு இடது கை இந்திய பேட்டர்கள் ஒரேபோட்டியில் சதம் அடித்திருப்பதும் இதுதான் முதல்முறை. இதற்குமுன் 2007-ல் கங்குலி- யுவராஜும், 1999-ல் ரமேஷ், கங்குலியும் இந்த சாதனையை படைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.