டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகும் ஜடேஜா?

Updated: Sat, Sep 03 2022 22:14 IST
Image Source: Google

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் இந்தியா சிறப்பாக விளையாடி வருகிறது. இதில் ஆல்ரவுன்டர் ரவீந்திர ஜடேஜாவின் ஆட்டம் கவனம் ஈர்த்தது. குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரவீந்திர ஜடேஜாவின் ஆட்டம் இந்திய அணி வெற்றி பெற கைகொடுத்தது. அதைத் தொடர்ந்து ஹாங்காங் அணியுடனான போட்டியில் மிரட்டலான ரன் அவுட் எடுத்து அணிக்கு பக்கபலமாக திகழ்ந்தார். 

இதனிடையே, வலது காலின் மூட்டு பகுதியில் ஏற்ப்பட்ட காயம் காரணமாக, அவர் நடப்பு ஆசிய கோப்பை தொடரிலிருந்து வெளியேறி உள்ளதாக பிசிசிஐ தெரிவித்தது. மருத்துவர் கண்காணிப்பிலிருக்கும் ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக ஆசிய கோப்பை தொடரில் அக்சர் படேல் இடம் பெற்றுள்ளார்.

இந்நிலையில், முழங்கால் அறுவை சிகிச்சை காரணமாக விரைவில் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடரில் ரவீந்திர ஜடேஜா பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. 

இது தொடர்பாக பிசிசிஐயின் மூத்த அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், ''ஜடேஜாவின் வலது முழங்காலில் ஏற்பட்டுள்ள காயம் மிகவும் தீவிரமாக உள்ளது. ஒருவேளை அவருக்கு முழங்கால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டால் அவர் காலவரையறையின்றி விளையாட்டிலிருந்து விலக வேண்டியிருக்கும்'' என தெரிவித்துள்ளார். 

அவர் சிகிச்சையிலிருந்து மீண்டு பழைய நிலைக்கு திரும்ப குறைந்தது ஆறு மாதங்கள் ஆகலாம் என கூறப்படுகிறது. ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் அணியே 20 ஓவர் உலகக் கோப்பைக்கும் தேர்வு செய்யப்படும் என்பதால், ஓரிரு இடங்கள் மட்டுமே மாற்றப்பட வேண்டிய சூழல் வரலாம் என கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்டோர் தெரிவித்திருந்தனர். 

ஆனால், இந்திய அணி போட்ட கணக்குக்கு பதிலாக காயம் பின்னடைவாக மாறியிருக்கிறது. ஜடேஜா விலகும் பட்சத்தில் அவருக்கு நிகரான ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் இந்திய அணிக்கு தேவை.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை