ஐபிஎல் 2023: சிஎஸ்கே என்பது வாழ்க்கையில் ஒரு குடும்பம் - சுரேஷ் ரெய்னா!
அடுத்தாண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் டிசம்பர் 23ஆம் தேதி நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. கேரள மாநிலம் கொச்சியில் இந்த ஏலமானது நடைபெறுகிறது. இந்த மினி ஏலத்திற்காக அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கப்போகும் வீரர்களின் பட்டியலை நவம்பர் 15ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அந்த வகையில் வீரர்களை தக்கவைப்பதற்கான காலக்கெடு நேற்று மாலையுடன் முடிந்துள்ளதால் ஒவ்வொரு அணிகளும் தாங்கள் தக்கவைத்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தக்க வைக்கப்பட்டுள்ள வீரர்கள் மற்றும் விடுவித்த வீரர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதன்படி, நீண்ட நாட்களாக சென்னை அணியில் ஜடேஜா நீடிப்பாரா அல்லது வேறு அணியில் ஆடுவாரா உள்ளிட்ட பல கேள்விகள் சென்னை அணியை சூழ்ந்திருந்தது. தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளது. அதன்படி, ஜடேஜாவை சிஎஸ்கே அணி தக்க வைத்து உள்ளது.
சென்னை அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி தொடர்கிறார். அதே நேரத்தில் அந்த அணி அதிரடி ஆல்ரவுண்டரான டுவைன் பிராவோ-வை விடுவித்துள்ளது. தற்போது சென்னை அணியின் கைவசம் ரூ. 20.45 கோடி உள்ளது.
இந்த நிலையில் சென்னை அணியால் தக்கவைக்கப்பட்டதை தொடர்ந்து ஜடேஜா வெளியிட்டுள்ள பதிவு சென்னை ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சிஎஸ்கே கேப்டன் தோனியை வணங்குவது போன்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ள ஜடேஜா, "எல்லாம் நன்றாக இருக்கிறது, மீண்டும் தொடங்கலாம்" என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதற்கு இன்ஸ்டாகிராமில் சென்னை அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா அளித்த பதிலிள், “சிஎஸ்கே என்பது வாழ்க்கையில் ஒரு குடும்பம்” என பதிவிட்டுள்ளார்.மற்றொரு பதிவில் சென்னை அணி வெளியிட்டுள்ள பதிவில், “எப்போதும் என்றென்றும் சிஎஸ்கே தான்” என பதிவிட்டுள்ளது. இந்த பதிவால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.