ஐபிஎல் 2024: ஆர்சிபி அணிக்கு எதிராக தனித்துவ சாதனை படைத்த பும்ரா!

Updated: Thu, Apr 11 2024 22:57 IST
ஐபிஎல் 2024: ஆர்சிபி அணிக்கு எதிராக தனித்துவ சாதனை படைத்த பும்ரா! (Image Source: Google)

நடப்பு ஐபிஎல் சீசனின் இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின.  மும்பையிலுள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களைக் குவித்தது.

அதன்படி ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, வில் ஜேக்ஸ், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் மற்றும் ராஜத் பட்டிதார் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தனர். இதில் ராஜத் பட்டிதார் 50 ரன்களில் ஆட்டமிழக்க, டூ பிளெசிஸும் 61 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 

அதன்பின் களமிறங்கிய வீரர்களும் பும்ரா பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய தினேஷ் கார்த்திக் 21 பந்துகளில் அரைசதம் கடந்ததுடன், 5 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 53 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் ஆர்சிபி அணி இந்த இலக்கை எட்டியது. மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 4 ஓவர்களை வீசிய பும்ரா, 21 ரன்களை கொடுத்து 5 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார்.

 

இந்நிலையில் இப்போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஜஸ்ப்ரித் பும்ரா ஐபிஎல் தொடர் வரலாற்றில் தனது இரண்டாவது 5 விக்கெட்டை கைப்பற்றினார். இதன்மூலம் ஐபிஎல் தொடரில் அதிக முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றியவர்களில் புவனேஷ்வர் குமார், ஃபால்க்னர், உனாத்கட் ஆகியோருடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடர் வரலாற்றில் ஆர்சிபி அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்ற தனித்துவ சாதனையையும் ஜஸ்ப்ரித் பும்ரா படைத்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை