சாதனையை நோக்கி காத்திருக்கும் பும்ரா!
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் டிராவில் முடிவடைந்த நிலையில், லார்ட்ஸில் நடைபெற்ற 2ஆவது டெஸ்டில் இந்தியா அபாரமாக விளையாடி வெற்றிப்பெற்றது. இந்தப் போட்டியில் பும்ரா - ஷமி ஆகியோரின் பேட்டிங், பவுலிங் சிறப்பாக இருந்தது. இதனால் லீட்ஸ் மைதானத்தில் தொடங்க இருக்கும் போட்டியை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.
வேகப்பந்துவீச்சாளர் பும்ரா இதுவரை 22 டெஸ்ட் போட்டிகளில் 95 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதற்கு முன்பு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் 25 டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்டை வீழ்த்தியதே இதுநாள்வரை சாதனையாக இருந்தது. லீட்ஸ் டெஸ்ட் போட்டியில் பும்ரா 100 விக்கெட்டுகளை எடுத்துவிட்டால், குறைந்த டெஸ்ட் போட்டியில் 100 விக்கெட்டை வீழ்த்தியவர் என்ற சாதனையை பெறுவார்.
பும்ரா ஏற்கெனவே மனோஜ் பிரபாகர், வெங்கடேஷ் பிரசாத் சாதனைகளை முறியடித்துவிட்டு கபில் தேவின் ரெக்கார்டை உடைக்க காத்திருக்கிறார். இங்கிலாந்துக்கு எதிரான நாட்டிங்கம் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டையும், இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டையும் வீழ்த்தினார். லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டையும், இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.