டி20 உலகக்கோப்பை: காயம் காரணமாக விலகுகிறாரா பும்ரா?

Updated: Thu, Aug 11 2022 19:37 IST
Image Source: Google

நடப்பாண்டுக்கான ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 27ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் முன்னணி வீரரான ஜஸ்பிரித் பும்ரா இல்லாதது பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியது.

ஜஸ்பிரித் பும்ராவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அவர் தொடரில் இருந்து நீக்கப்பட்டதாகவும் பிசிசிஐ விளக்கமளித்தது. இதனையடுத்து அர்ஷ்தீப் சிங் மற்றும் ஆவேஷ் கான் போன்ற அனுபவமில்லாத வீரர்கள் சேர்க்கப்பட்டனர். முக்கியமான தொடரில் பும்ரா இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவாக செல்லும் என வல்லுநர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரிலும் பும்ரா இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. ஜஸ்பிரித் பும்ராவுக்கு இடுப்பு பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்தின் தன்மை தீவிரமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் கடந்த 2019ஆம் ஆண்டு அவரின் வாய்ப்புகளை பறித்த அதே காயம் மீண்டும் தொந்தரவு கொடுப்பதாக தெரியவந்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காய பாதிப்பின் காரணமாக சுமார் 5 மாதங்களுக்கும் மேலாக இந்திய அணியில் இடம் பிடிக்காமல் இருந்தார். இதனால் பல தொடர்களில் இந்தியாவுக்கு பின்னடைவானது. எனவே டி20 உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள சூழலில் ஒரு மாதத்திற்குள் அணியை அறிவிக்க வேண்டும்.

ஜஸ்பிரித் பும்ராவின் காயம் ஒரு மாதத்திற்குள் குணமடைந்தால் மட்டுமே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் கிடைக்கும். மற்றொரு பவுலரான ஹர்ஷல் பட்டேலுக்கும் தீவிர காயம் ஏற்பட்டுள்ளதால் இந்திய அணியின் டி20 உலகக்கோப்பை கனவுக்கு சிக்கல் உருவாகியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை