இந்தியாவில் மட்டுமே ஐபிஎல் தொடர் நடத்தப்படும்; ஜெய் ஷா உறுதி!

Updated: Sat, Mar 16 2024 21:42 IST
இந்தியாவில் மட்டுமே ஐபிஎல் தொடர் நடத்தப்படும்; ஜெய் ஷா உறுதி! (Image Source: Google)

இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்தியன் பிரீமியர் லீக் டி20 தொடரானவது வெற்றிகரமாக 16 சீசன்களைக் கடந்து, 17ஆவது சீசனை நோக்கி நகர்ந்துள்ளது. இதில் எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் சர்மா வழிநடத்தி வந்த மும்பை இந்தியன்ஸ் அணியும் தலா 5 சாம்பியன் பட்டங்களை வென்று அசத்தியுள்ளன.

இந்நிலையில் இத்தொடரின் 17ஆவது சீசனில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதன்படி இந்தாண்டு மார்ச் மாதம் 22ஆம் தேதி தொடங்கும் இத்தொடரின் இறுதிப்போட்டியானது மே மாதம் 26ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதால் இத்தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடுவது தாமதம் ஏற்பட்டிருந்தது. 

அதன் காரணமாக இத்தொடரின் முதல் இரண்டு வாரங்களுக்கான போட்டி அட்டவணையை மட்டும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்நிலைய்ல் பொதுத்தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளுக்கான அட்டவணை எப்போது வெளியாகும் என்ற சந்தேகங்கள் எழுந்து வருகின்றன. இதனால் ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதி இந்தியாவில் நடைபெறுமா என்ற சந்தேகமும் எழுந்தது. 

 

இதன் காரணமாக ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதி ஆட்டம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் பொது தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. இதனைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரின் அனைத்து போட்டிகளும் இந்தியாவிலேயே நடைபெறும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உறுதிசெய்துள்ளார். இதனையடுத்து ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டி அட்டவணை கூடிய விரைவில் அறிவிக்கப்பட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை