ஓமன் கிரிக்கெட் ரசிகர்களுக்கு டி20 உலகக்கோப்பை தொடர் மிகப்பெரும் விருந்தாக அமையும் - ஜெய் ஷா
இந்தியாவில் இந்தாண்டு நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பை தொடர் கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெறுமென ஐசிசி அறிவித்துள்ளது.
மேலும் இப்போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள துபாய், அபுதாபி, சார்ஜா மைதானங்களிலும் ஓமன் கிரிக்கெட் அகெடமி மைதானத்தில் நடைபெறவுள்ளன.
இந்நிலையில் போட்டி ஏற்பாடுகள் குறித்து ஆராய பிசிசிஐ நிர்வாகிகள் இன்றும் நாளையும் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் இத்தொடரின் குழுக்கள் குறித்து அறிவிப்பையும் ஐசிசி இன்று வெளியிட்டு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தனது ட்விட்டர் பதிவில், “ஐசிசி டி 20 உலகக் கோப்பை குழுக்களின் அறிவிப்புக்காக மஸ்கட்டில் கங்குலி, ஓமன் கிரிக்கெட் அலுவலர்கள், ஐசிசி அலுவலர்களுடன் இங்கு வத்ததில் பெரும் மகிழ்ச்சி.
உலகக்கோப்பை தொடரை நடத்தும் துணை நாடு மற்றும் பங்கேற்கும் நாடு என்ற வகையில், இங்குள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது ஒரு மிகப்பெரிய தருணம். மேலும் ஓமனில் கிரிக்கெட் விளையாட்டை முன்னேற்றத்திற்கு கொண்டு செல்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.