2nd ODI: விவியன் ரிச்சர்ட்ஸ் சாதனையை முறியடித்த ஜெஃப்ரி வண்டர்சே!

Updated: Mon, Aug 05 2024 13:09 IST
Image Source: Google

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 2ஆவது ஒருநாள் போட்டி நேற்று கொழும்பில் உள்ள ஆர் பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது. மேலும் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ஜெஃப்ரி வண்டர்சே தனது சிறப்பான பந்துவீச்சின் மூலம் புதிய வரலாறு படைத்துள்ளார். 

இப்போட்டியில் ஜெஃப்ரி வாண்டர்சே 10 ஓவர்களில் 33 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த சிறப்பான ஆட்டத்திற்காக அவர் ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். அதன்படி இந்திய அணியின் முதல் ஆறு விக்கெட்டுகளான கேப்டன் ரோஹித் சர்மா, ஷுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ஷிவம் துபே மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரது விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

இதன்மூலம் ஒரு சுழற்பந்து வீச்சாளராக, இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சிறந்த பந்துவீச்சு வெளிப்படுத்திய வீரர்கள் வரிசையில் ஜெஃப்ரி வாண்டர்சே மூன்றாவது இடத்தை எட்டியுள்ளார். முன்னதாக கடந்த 1989 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற இந்தியா அணிக்கு எதிரான போட்டியில்  வெஸ்ட் இண்டீஸின் முன்னாள் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் 41 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி மூன்றாம் இடத்தில் இருந்த நிலையில், தற்போது அதனை ஜெஃப்ரி வண்டர்சே முறியடித்துள்ளார். 

இந்த பட்டியலில் இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் 30 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்திலும், இலங்கையைச் சேர்ந்த அஞ்சதா மெண்டிஸ் 13 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாவது இடத்திலும் உள்ளனர். காயம் காரணமாக வனிந்து ஹசரங்க ஒருநாள் தொடரில் இருந்து விலகியதை அடுத்து, இந்த போட்டிக்கான பிளேயிங் லெவனில் ஜெஃப்ரி வண்டர்சேவுக்கு வாய்ப்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ், அவிஷ்க ஃபெர்னாண்டோ ஆகியோர் 40 ரன்களையும், துனித் வெல்லாலகே 39 ரன்களையும், குசல் மெண்டிஸ் 30 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், முகமது சிராஜ், அக்ஸர் படேல் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

இதனைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 42.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 208 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் கேப்டன் ரோஹித் சர்மா 64 ரன்களும், அக்ஸர் படேல் 44 ரன்களும், ஷுப்மான் கில் 35 ரன்களும் எடுத்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இலங்கை தரப்பில் ஜெப்ரி வான்டர்சே 6 விக்கெட்டுகளையும், கேப்டன் சரித் அசலங்கா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை