NZ vs PAK: ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த ஜேம்ஸ் நீஷம்!

Updated: Wed, Mar 26 2025 20:02 IST
Image Source: Google

நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று வெலிங்டனில் உள்ள ஸ்கை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் கேப்டன் சல்மான் அலி ஆகா அரைசதம் கடந்து அசத்தியதுடன் 51 ரன்களையும், ஷதாப் கான் 28 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்களை மட்டுமே சேர்த்தது. நியூசிலாந்து அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜேம்ஸ் நீஷம் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணியில் ஃபின் ஆலன் 27 ரன்னிலும், மார்க் சாப்மேன் 3 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தாலும், அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டிம் செஃபெர்ட் அரைசதம் கடந்து அசத்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 6 பவுண்டரி, 10 சிக்ஸர்கள் என 97 ரன்களைக் குவித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. 

இப்போட்டியில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜேம்ஸ் நீஷம் ஆட்டநாயகன் விருதையும், இத்தொடர் முழுவதும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிம் செஃபெர்ட் தொடர்நாயகன் விருதையும் கைப்பற்றி அசத்தியுள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான இப்போட்டியில் நியூசிலாந்து ஆல் ரவுண்டர் ஜேம்ஸ் நீஷம் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியதன் மூலம் சாதனையாளர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். 

அந்தவகையில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணிக்காக ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய நான்காவது வீரர் எனும் பெருமையை ஜேம்ஸ் நீஷம் பெற்றுள்ளார். இதற்கு முன் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் டிம் சௌதீ, லோக்கி ஃபெர்குசன், ஆடம் மில்னே ஆகியோர் மட்டுமே சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: Funding To Save Test Cricket

மேற்கொண்டு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய உலகின் ஐந்தாவது மற்றும் நியூசிலாந்தின் இரண்டாவது வீரர் எனும் சாதனையையும் ஜேம்ஸ் நீஷம் படைத்துள்ளார். முன்னதாக நியூசிலாந்தின் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதீ கடந்த 2010ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை