கவாஸ்கர், பாண்டிங் சாதனைகளை முறியடித்த ஜோ ரூட்!
சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக திகழும் ஜோ ரூட், கடந்த 2 ஆண்டுகளாக அபாரமாக பேட்டிங் ஆடி டெஸ்ட் கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். கடந்த 2 ஆண்டுகளில் விராட் கோலியின் கெரியர் கிராஃப் சரிவை சந்தித்துள்ள அதேவேளையில், ஜோ ரூட்டின் கெரியர் கிராஃப் உயர்ந்துள்ளது.
இந்தியாவிற்கு எதிரான எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்டில், 378 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு, ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகிய இருவரும் சதமடித்து வெற்றியை தேடிக்கொடுத்தனர். ஜோ ரூட் அபாரமாக பேட்டிங் ஆடி 142 ரன்களை குவித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இது ஜோ ரூட்டின் 28ஆவது சதம்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதமடித்த வீரர்கள் பட்டியலில் 15ஆவது இடத்தில் இருக்கும் ஜோ ரூட், அதிக சதமடித்த சமகால கிரிக்கெட் வீரர்களில் முதலிடத்தில் உள்ளார். ரூட்டின் போட்டியாளர்களான விராட் கோலி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இருவரும் தலா 28 சதங்களுடன் ரூட்டுக்கு அடுத்த இடத்தில் உள்ளனர்.
இந்த போட்டியில் அடித்த சதத்தின் மூலம் கவாஸ்கர் மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகிய இருபெரும் ஜாம்பவான்களின் சாதனைகளை தகர்த்துள்ளார் ஜோ ரூட்.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களை குவித்த வீரராக சச்சின் டெண்டுல்கர் (2535 ரன்கள்) முதலிடத்தில் இருக்கிறார். 2,483 ரன்களுடன் இந்த பட்டியலில் கவாஸ்கர் 2ஆம் இடத்தில் இருந்தார். அவரை பின்னுக்குத்தள்ளி 2,509 ரன்களை குவித்து ஜோ ரூட் 2ஆம் இடத்தை பிடித்துவிட்டார்.
கவாஸ்கர் 38 டெஸ்ட் போட்டிகளில் 2483 ரன்களை அடித்துள்ளார். ஆனால் ரூட் வெறும் 25 டெஸ்ட் போட்டிகளில் அவரது சாதனையை தகர்த்துவிட்டார். இந்தியாவிற்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னும் 46 ரன்கள் அடித்தால் சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் தகர்த்துவிடுவார்.
இந்தியாவிற்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட்டின் 9ஆவது சதம் இது. இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவிற்கு எதிராக அதிக சதங்களை அடித்த ரிக்கி பாண்டிங்கின்(8 சதம்) சாதனையை தகர்த்துள்ளார் ஜோ ரூட்.