ஸ்டோக்ஸ், சேவாக் சாதனையை முறியடித்த பேர்ஸ்டோவ்!
வரலாற்றின் முதல் டெஸ்ட் சாம்பியன் நியூசிலாந்தை தனது சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இங்கிலாந்து எதிர்கொண்டது. ஜூன் 2இல் லண்டனில் தொடங்கிய அந்த தொடரின் முதல் 2 போட்டிகளில் அபாரமாக செயல்பட்டு அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இங்கிலாந்து 2 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரை கைப்பற்றியது.
இந்நிலைமையில் ஜூன் 23இல் லீட்ஸ் நகரில் துவங்கிய சம்பிரதாய கடைசி போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து 329 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி பேர்ஸ்டோவின் அதிரடியான சதத்தின் மூலம் 360 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக டிரென்ட் போல்ட் 4 விக்கெட்டுகளும் டிம் சவுத்தி 3 விக்கெட்டும் எடுத்தனர்.
இதனால் 31 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2ஆவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்த நியூசிலாந்து முடிந்த அளவுக்கு போராடிய போதிலும் 326 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 296 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இங்கிலாந்துக்கு ஓலி போப் 82 ரன்களும் நல்ல பார்மில் இருக்கும் ஜோ ரூட் 86* ரன்கள் எடுத்தனர்.
அவர்களை விட கடைசி நேரத்தில் டி20 இன்னிங்ஸ் போல 8 பவுண்டரி 3 சிக்சர்களை பறக்க விட்ட ஜானி பேர்ஸ்டோ 71* (44) ரன்களை 161.35 என்ற ஸ்டிரைக் ரேட்டில் விளாசி சிக்சருடன் சூப்பர் பினிஷிங் கொடுத்தார். அதனால் 296/3 ரன்களை எடுத்த இங்கிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 3 – 0 (3) என்ற கணக்கில் டெஸ்ட் சாம்பியன் நியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்து கோப்பையை வென்றது.
இந்தத் தொடரில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறோம் என்பதை மறந்த இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் ஜானி பேர்ஸ்டோவ் முதல் போட்டியில் தடுமாறினாலும் கடைசி 2 போட்டிகளிலும் எவ்வளவோ தன்னை கட்டுப்படுத்த முயன்றும் ஏதோ ஒரு இன்னிங்சில் வெறித்தனமான டி20 இன்னிங்ஸ்களில் விளையாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
அதிலும் லீட்ஸ் நகரில் நடந்த 3ஆவது டெஸ்டின் 2ஆவது இன்னிங்சில் வெறும் 30 பந்துகளில் அரைசதம் விளாசிய அவர் டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக அரைசதம் அடித்த 2ஆவது இங்கிலாந்து பேட்ஸ்மேனாக சாதனை படைத்தார். மேலு; அதே டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 144 பந்துகளில் 150 ரன்களைக் கடந்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 150 ரன்களை கடந்த 2ஆவது இங்கிலாந்து பேட்ஸ்மேன் என்ற சாதனையை மீண்டும் படைத்தார்.
அதேபோல் நாட்டிங்காம் நகரில் நடந்த 2-வது டெஸ்டின் 2-வது இன்னிங்சில் வெறும் 77 பந்துகளில் சதமடித்த அவர் அதிவேகமாக சதமடித்த 2-வது இங்கிலாந்து பேட்ஸ்மேன் என்ற சாதனை படைத்தார்.
அதைவிட இந்த தொடர் முழுவதும் களமிறங்கி 3 போட்டிகளில் சந்தித்த 328 பந்துகளில் 394 ரன்களை 120.12 என்ற டி20 ஸ்டிரைக் ரேட்டில் தெறிக்கவிட்ட அவர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு தொடரில் அதிக ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் ரன்களை குவித்த பேட்ஸ்மேன் என்ற புதிய சாதனையைப் படைத்தார்.
அந்த பட்டியல் இதோ (குறைந்தது 300 பந்துகளை எதிர்கொண்ட பேட்ஸ்மேன்கள்):
- ஜானி பேர்ஸ்டோ : 394 (328) ரன்கள், 120.12 ஸ்ட்ரைக் ரேட், 2022*
- பென் ஸ்டோக்ஸ் : 411 (377) ரன்கள், 109.01 ஸ்ட்ரைக் ரேட், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக, 2015/16
- விரேந்தர் சேவாக் : 491 (454) ரன்கள், 108.14 ஸ்ட்ரைக் ரேட், இலங்கைக்கு எதிராக, 2009