ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியாலும் வாங்கப்படாத விரக்தி; அதிரடியில் மிரட்டிய பேர்ஸ்டோவ் - காணொளி!
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 மெகா ஏலத்தில் இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோவை எந்த அணியும் ஏலத்தில் வாங்க ஆர்வம் காட்டவில்லை. ஐபிஎல் தொடரில் இதுவரை 50 போட்டிகளில் விளையாடியுள்ள பேர்ஸ்டோவ் அதில் 2 சதங்கள், 9 அரைசதங்கள் என 1,589 ரன்களைக் குவித்துள்ளார். அதிலும் கடந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக பேர்ஸ்டோவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையிலும், அந்த அணி கூட அவரை வாங்க முன்வரவில்லை.
இப்படி ஐபிஎல் தொடரில் எந்த அணியாலும் ஏலம் எடுக்கப்படாம்ல் இருந்த பேர்ஸ்டோவ், களத்தில் தன்னால் என்ன செய்ய முடியும் என்பதை மீண்டும் உலகுக்குக் காட்டியுள்ளார். அதிலும் தனது அசாதாரண பவர் ஹிட்டிங் மூலம் ரசிகர்களின் கவனத்தையும் அவர் ஈர்த்துள்ளார். அதன்படி அபுதாபி டி10 லீக் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டீம் அபுதாபி அணிக்காக விளையாடிய அவர் ஒரு ஓவரில் 27 ரன்களைச் சேர்த்து மிரட்டினார்.
அதன்படி மோரிஸ்வில்லே அணியைச் சேர்ந்த ஷராபுதீன் அஷ்ரப் வீசிய இன்னிங்ஸின் 6ஆவது ஓவரில் பேர்ஸ்டோவ் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் எடுத்தார். அதிலும் பேர்ஸ்டோவ் டீப் மிட் விக்கெட்டுக்கு மேல் இரண்டு சிக்சர்களையும், தேர்ட் மேன் திசையில் ஒரு பவுண்டரியையும், பின்னர் டீப் மிட் விக்கெட் திசைக்கு மேல் மற்றொரு சிக்ஸரையும் விளாசிய நிலையில், மீண்டும் தேர்ட் மேன் திசையில் பவுண்டரியை விளாசினார்.
இப்படி அந்த ஓவரில் அவர் மொத்தமாக 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 26 ரன்களை பவுண்டரிகளின் மூலமே விளாசித் தள்ளினார். இதுதவிர்த்து இந்த போட்டியில் அரைசதம் கடந்து அசத்திய ஜானி பேர்ஸ்டோவ், 30 பந்துகளில் 5 பவுண்டரி, 6 சிக்ஸர்களை விளாசி 70 ரன்களைக் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்நிலையில் ஜானி பேர்ஸ்டோவ் அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்சர்களையும் விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இப்போட்டியைப் பற்றி பேசினால், டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த மோரிஸ்வில்லே அணியானது 9.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக சர்ஜீல் கான் 28 ரன்களையும், ஆண்ட்ரிஸ் கௌஸ் 27 ரன்களையும் சேர்த்தனர். டீம் அபுதாபி அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஜோர்டன் கிளார்க் 4 விக்கெட்டுகளையும், ஆடம் மில்னே, நூர் அஹ்மத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
Also Read: Funding To Save Test Cricket
அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய அபுதாபி அணியில் ஜானி பேர்ஸ்டோவ் 5 பவுண்டரி 6 சிக்ஸர்கள் என 30 பந்துகளில் 70 ரன்களைச் சேர்த்த நிலையிலும் அந்த அணி 10 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் மோரிஸ்வில்லே சாம்ப் ஆர்மி அணியானது 3 ரன்கள் வித்தியாசத்தில் டீம் அபுதபி அணியானது த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது குறிப்பிடத்தக்கது.