ENG vs IND, 1st ODI: நாங்கள் எதிர்கொண்டதில் பும்ரா ஒரு சிறந்த பவுலர் - ஜோஸ் பட்லர்!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த இந்திய அணியில் பும்ரா மற்றும் முகமது ஷமியின் அனல் பறக்கும் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதன் மூலம் இங்கிலாந்து அணி 110 ரன்களில் சுருண்டது. இந்திய வீரர் பும்ரா 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.
அதன்பின் எளிய இலக்கை துரத்திய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா - ஷிகர் தவான் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 18.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டியது.
இதனிடையே தோல்வியை குறித்து பேசிய இங்கிலாந்து அணி கேப்டன் ஜாஸ் பட்லர், “மிகவும் கடினமான நாளாக இது அமைந்தது. இந்த தோல்வியால் மூழ்கி விடால் அடுத்த போட்டிக்கு தயாராக வேண்டும். வானம் மேகமூட்டத்துடன் இருந்ததால் பந்து நன்றாக ஸ்விங் ஆகும் என்று தெரியும். இந்திய வீரர்கள் அந்த சூழலை சிறப்பாக பயன்படுத்தி கொண்டனர். டி20 போட்டியில் பவர்பிளேவிலும் சரி இந்திய வீரர்கள் நன்றாக பந்துவீசி நெருக்கடி அளித்தனர்.
நாங்கள் எதிர்கொண்டதில் பும்ரா ஒரு சிறந்த பவுலர். அவர் பந்துவீசிய விதம் பிரமிக்க வைக்கும் வகையில் இருந்தது. 6 விக்கெட் எடுத்ததற்கு தகுதியான நபர் தான் அவர். விக்கெட் எடுத்தால் தான் வெற்றி பெற முடியும் என்ற நிலை எப்போதுமே கடினமானது தான். ரிஸ்க் எடுத்து விக்கெட்டை எடுத்து தாருங்கள் என்று கூறுவது சரி கிடையாது. டெஸ்ட் போட்டியில் நல்ல ஃபார்மில் இருந்துவிட்டு, தற்போது எங்களது வீரர்கள் அவுட்டாகிவிட்டனர்” என தெரிவித்தார்.