விராட் கோலி, கிறிஸ் கெயில் சாதனைகளை முறியடித்த ஜோஸ் பட்லர்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் ரஜாஸ்தான் ராயல்ஸ் அணி கடைசி பந்தில் இலக்கை எட்டியதுடன் 2 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. அதன்படி இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக சுனில் நரைன் 109 ரன்களை குவித்தார்.
இதனையடுத்து இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜோஸ் பட்லரின் அதிரடியான சதத்தின் மூலம் கடைசி பந்தில் இலக்கை எட்டி த்ரில் வெற்றியைப் பெற்றது. இப்போட்டியில் தொடக்கத்தில் மெதுவாக விளையாடிய பட்லர் முதல் 6 ஓவரில் 12 பந்துகளில் 20 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். ஆனால் ஆட்டம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடிய அவர், 55 பந்துகளில் சதமடித்து மிரட்டினார்.
ஒரு முனையில் விக்கெட் விழுந்தாலும் மறுமுனையில் தன்னை நிலைப்படுத்தி கொண்டு அதே நேரத்தில் அதிரடியையும் வெளிப்படுத்தி வந்த அவர், இறுதிவரை ஆட்டமிழக்காமல் தனி ஒருவராக கடைசி வரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு போராடி சாதனை வெற்றியை பெற்றுத்தந்தார். இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜோஸ் பட்லர் 9 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 107 ரன்களை குவித்து அசத்தியதன் மூலம் இப்போட்டியில் ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.
இந்நிலையில் இப்போட்டியில் சதமடித்தன் மூலம் ஐபிஎல் தொடரில் தனது 7ஆவது சதத்தையும், இத்தொடரில் தனது இரண்டாவது சதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக சதங்களை அடித்த வீரர்கள் வரிசையில் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. இப்பட்டியலில் இந்திய வீரர் விராட் கோலி 8 சதங்களை விளாசி முதல் இடத்திலும், வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெயில் 6 சதங்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
மேலும் சதமடித்து அணியை வெற்றிபெற செய்ததின் மூலம், சேஸிங்கின் போது அதிக சதங்களை அடித்த வீரர்கள் வரிசையில் மூன்று சதங்களை அடித்து ஜோஸ் பட்லர் சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் விராட் கோலி மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் சேஸிங்கின் போது தலா 2 சதங்களை அடித்ததே சாதனையாக இருந்த நிலையில் அதனைத் தற்போது ஜோஸ் பட்லர் முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
அதுபோக ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக சதங்களை அடித்த வெளிநாட்டு வீரர்கள் வரிசையில் வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெயில் சாதனையையும் ஜோஸ் பட்லர் முறியடித்துள்ளார். இதற்கு முன் கிறிஸ் கெயில் 6 சதங்களை அடித்ததே சாதனையாக இருந்த நிலையில், நேற்றைய சதத்தின் மூலம் ஜோஸ் பட்லர் 7 சதங்களை விளாசி புதிய சாதனையைப் படைத்துள்ளார்.