இங்கிலாந்து ஒருநாள் & டி20 அணியின் கேப்டனாக ஜோஸ் பட்லர் நியமனம்!
இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு 2015 உலக கோப்பை தோல்விக்கு பின், வலுவான இங்கிலாந்து அணியை கட்டமைத்து 2019இல் ஒருநாள் உலக கோப்பையை வென்று கொடுத்தவர் ஈயன் மோர்கன். இங்கிலாந்து அணியை வெள்ளைப்பந்து கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக வழிநடத்தி, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஆதிக்கம் செலுத்தி வெற்றிநடை போடவைத்தவர் இயன் மோர்கன்.
சர்வதேச கிரிக்கெட்டில் 248 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7,701 ரன்களையும், 115 டி20 போட்டிகளில் விளையாடி 2,458 ரன்களையும் குவித்த ஈயன் மோர்கன், கடந்த ஒன்றரை ஆண்டாக ஃபிட்னெஸ் மற்றும் ஃபார்மில் இல்லாமல் தவித்துவந்தார்.
இந்நிலையில், அண்மையில் நடந்த நெதர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து இங்கிலாந்து சாதனையை செய்தபோதிலும், அந்த போட்டியிலும், அதற்கடுத்த போட்டியிலும் என 2 அடுத்தடுத்த போட்டிகளில் டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார் மோர்கன்.
தனது மோசமான ஃபார்ம் மற்றும் தன்னால் அணிக்கு பயனில்லை என்பதை உணர்ந்த ஈயன் மோர்கன், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார்.
இந்நிலையில், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய வெள்ளைப்பந்து கிரிக்கெட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியின் புதிய கேப்டனாக ஜோஸ் பட்லர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சமகால கிரிக்கெட்டில் வெள்ளைப்பந்து கிரிக்கெட் போட்டிகளின் தலைசிறந்த மற்றும் அபாயகரமான வீரராக திகழ்ந்துவரும் ஜோஸ் பட்லர், 151 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 4,120 ரனக்ளையும், டி20 போட்டிகளில் விளையாடி 2,140 ரன்களையும் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.