ஐபிஎல் தொடரில் புதிய மைல்கல்லை எட்ட காத்திருக்கும் ஜோஸ் பட்லர்!
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இத்தொடரில் நாளை நடைபெறும் 51ஆவது லீக் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிபெற்ற நிலையில், அதற்கான பதிலடியை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக இரு அணிகளும் தீவிரமாக தயாராகியும் வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஜோஸ் பட்லர் சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
அதன்படி இந்தப் போட்டியில் பட்லர் 12 ரன்கள் எடுத்தால், ஐபிஎல் தொடரில் தனது 4000 ரன்களை நிறைவு செய்வார். இதனை எட்டும் பட்சத்தில் ஐபிஎல் தொடரில் அதிவேகமாக (பந்துகள் அடிப்படையில்) 4ஆயிரம் ரன்களை கடந்த மூன்றாவது வீரர் எனும் பெருமையைப் பெறுவார். தற்போது இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 2714 பந்துகளில் கடந்ததே சாதனையாக உள்ளது. ஜோஸ் பட்லர் இதுவரை 116 போட்டிகளில் 115 இன்னிங்ஸ்களில் 3988 ரன்கள் எடுத்துள்ளார், மேலும் அவர் 2669 பந்துகளை எதிர்கொண்டுள்ளார்.
இது தவிர, ஐபிஎல் தொடரில் 4000 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் எடுத்த ஐந்தாவது வெளிநாட்டு வீரர் என்ற பெருமையையும் ஜோஸ் பட்லர் பெறுவார். இதுவரை ஐபிஎல் தொடரில் டேவிட் வார்னர், ஏபி டிவில்லியர்ஸ், கிறிஸ் கெய்ல் மற்றும் ஃபாஃப் டு பிளெசிஸ் ஆகியோர் மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளனர். அதேசமயம் ஜோஸ் பட்லர் சிறப்பான ஃபார்மில் இருப்பதன் காரணமாக இந்த மைல்கல்லை நிச்சயம் பூர்த்தி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Gujarat Titans XI: சாய் சுதர்ஷன், ஷுப்மான் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர், வாஷிங்டன் சுந்தர், ராகுல் திவேத்தியா, ஷாருக்கான், ரஷித் கான், சாய் கிஷோர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, இஷாந்த் சர்மா.
Also Read: LIVE Cricket Score
Sunrisers Hyderabad XI: அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன், ஹென்ரிச் கிளாசென், அனிகேத் வர்மா, கமிந்து மெண்டிஸ், நிதிஷ் குமார் ரெட்டி, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஹர்ஷல் படேல், ஜெய்தேவ் உனத்கட், முகமது ஷமி.