மீண்டும் காயத்தை சந்தித்த ஹேசில்வுட்; ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவு!
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியானது டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரது சதங்கள் காரணமாக முதல் இன்னிங்ஸில் 445 ரன்களைச் சேர்த்து அல் அவுட்டானது.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கியுள்ள இந்திய அணியானது அஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்னிலும், ஷுப்மன் கில் ஒரு ரன்னிலும், விராட் கோலி 3 ரன்னிலும், ரிஷப் பந்தும் 9 ரன்னிலும், ரோஹித் சர்மா 10 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதேசமயம் கேஎல் ராகுல் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
பின் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேஎல் ராகுல் 84 ரன்னில் விக்கெட்டை இழந்த நிலையில், ரவீந்திர ஜடேஜா மற்றும் நிதீஷ் ரெட்டி இணை அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதனால் நான்காம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ரவீந்திர ஜடேஜா 41 ரன்களுடனும், நிதீஷ் ரெட்டி 7 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் இப்போட்டியின் போது ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் காயம் காரணமாக களத்தில் இருந்து பாதியிலேயே பெவிலியன் திரும்பினார். இதனால் இப்போட்டியில் அவர் மீண்டும் பந்துவீசுவாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதேசமயம் தற்போது அவரின் காயத்தின் தன்மை குறித்து அறிய ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக இத்தொடரின் முதல் போட்டியில் விளையாடிய ஹேசில்வுட் அதன்பின் காயம் காரணமாக இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விலகினார். இதனால் ஸ்காட் போலாண்டிற்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் காயத்திலிருந்து ஹேசில்வுட் மீண்ட நிலையில் மீண்டும் அவர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால் அச்சமயத்தில் ஹேசில்வுட்டின் உடற்தகுதி குறித்த கேள்விகள் அதிகரித்திருந்தது.
Also Read: Funding To Save Test Cricket
அத்துடன் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஸ்காட் போலண்ட் மீண்டும் பிளேயிங் லெவனில் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற குரல்களும் எழுந்தன. இருப்பினும் ஜோஷ் ஹேவில்வுட்டிற்கே பிளேயிங் லெவனில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி இப்போட்டியில் 6 ஓவர்களை வீசி 22 ரன்களைக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். ஆனால் தற்போது அவர் காயமடைந்துள்ளதால், ஒரு பந்துவீச்சாளர் குறைவாக விளையாட வேண்டிய கட்டாயத்திற்கு ஆஸ்திரேலிய அணி தள்ளப்பட்டுள்ளது.