பென் ஸ்டோக்ஸ் ஓய்வு குறித்து கருத்து தெரிவித்த நாசர் ஹுசைன்
இங்கிலாந்து அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் திடீரென ஓய்வு அறிவிப்பை வெளியிட்டிருந்தார். சமீபத்தில் டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட அவர், திடீரென ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
தற்போது 31 வயதே ஆகும் பென் ஸ்டோக்ஸ் ஓய்வு பெறுவதற்கு கூறிய காரணம் தான் பரபரப்பை கிளப்பியது. அதாவது டி20, 50 ஓவர் கிரிக்கெட், டெஸ்ட் என தொடர்ச்சியாக போட்டிகள் அடுக்கப்படுவதாகவும், பனிச்சுமை அதிகமானதால் வெளியேறுவதாக கூறியிருந்தார். இதன்மூலம் வருமானத்திற்காக போட்டிகளை கணக்கின்றி ஐசிசி நடத்துவதாக விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் வீரர் நாசர் ஹுசைன் முக்கிய கருத்தை பதிவு செய்துள்ளார். அதில், “பென் ஸ்டோக்ஸ் தனது 80% ஆட்டத்தை கொடுத்திருந்தால் கூட போதும் தான். ஆனால் அவர் அப்படி விளையாடினால், மற்ற வடிவ கிரிக்கெட்டிலும் அவரின் ஃபார்ம் குறைந்து அவதிப்படுவார். அதில் இருந்து தப்பிக்க தான் இந்த முடிவை எடுத்துவிட்டார்.
உதாரணத்திற்கு விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சனை எடுத்துக்கொள்ளலாம். அவர்கள் இருவருமே கேப்டன்சி, பனிச்சுமை, ஐபிஎல், காயங்கள் என ஒரே நேரத்தில் சமாளிக்க முயன்று தற்போது மோசமான ஃபார்மில் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக அவர்களால் முன்பை போன்று விளையாட முடியவில்லை.
பென் ஸ்டோக்ஸும் கூட தற்போது சிறப்பாக இல்லை. நேற்று நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அவர் பந்தை சந்திப்பதற்கு திணறியதை தெளிவாக பார்க்க முடிந்தது. எனவே பனிச்சுமையால் பென் ஸ்டோக்ஸ் ஓய்வு பெற்றதே சரி தான்” என்பது போன்று நாசர் ஹுசைன் கூறினார்.