ஐபிஎல் தொடரிலிருந்து விலகியது குறித்து பாட் கம்மின்ஸ் விளக்கம்!
ஆஸ்திரேலிய டெஸ்ட், ஒருநாள் அணிகளின் கேப்டனான பேட் கம்மின்ஸ், 2023 ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார். இவரை 2022 ஐபிஎல் ஏலத்தில் ரூ. 7.25 கோடிக்கு தேர்வு செய்தது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி. எனினும் 5 ஆட்டங்களில் மட்டும் விளையாடிய கம்மின்ஸ், இடுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாகப் போட்டியிலிருந்து விலகினார்.
இந்நிலையில் பணிச்சுமை காரணமாக ஐபிஎல் 2023 போட்டியிலிருந்து விலகுவதாகச் சமீபத்தில் அறிவித்தார் கம்மின்ஸ்.இது கொல்கத்தா அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள பாட் கம்மின்ஸ், “அடுத்த 12 மாதங்களில் ஏராளமான கிரிக்கெட் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. அதனால் தான் ஐபிஎல் போட்டியிலிருந்து வெளியேறினேன். இன்னும் நாங்கள் 15 டெஸ்டுகள் விளையாட வேண்டும். டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்குத் தகுதியடைவோம் என நம்புகிறேன்.
ஏகப்பட்ட ஒருநாள் ஆட்டங்களும் உலகக் கோப்பைப் போட்டியும் இருக்கின்றன. இந்நிலையில் ஐபிஎல் போட்டியிலும் நான் விளையாடினால் எனக்கேற்ற ஓய்வு கிடைக்காது. எனவே நேரம் கிடைக்கும்போது குடும்பத்துடன் நேரம் செலவிட வேண்டும். மனத்தளவில் நல்ல நிலைமையில் நான் இருக்க வேண்டும். கேப்டன் ஆனபிறகு இதில் கூடுதலாகக் கவனம் செலுத்தியுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.