புதிய மைல்கல்லை எட்டிய கேன் வில்லியம்சன்!

Updated: Tue, Feb 06 2024 15:18 IST
புதிய மைல்கல்லை எட்டிய கேன் வில்லியம்சன்! (Image Source: Google)

தென் ஆப்பிரிக்க அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 4ஆம் தேதி தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 511 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 240 ரன்களையும், கேன் வில்லியம்சன் 118 ரன்களையும் சேர்த்தனர். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 162 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆல அவுட்டானது. இதையடுத்து 349 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணி கேன் வில்லியம்சனின் அபாரமான சதத்தின் மூலம் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 179 ரன்களைச் சேர்த்ததுடன், இரண்டாவது இன்னிங்ஸில் 528 ரன்கள் முன்னிலையும் பெற்றது. 

இந்நிலையில் இப்போட்டியின் இரு இன்னிங்ஸிலும் கேன் வில்லியம்சன் சதமடித்து சில சாதனைகளைப் படைத்துள்ளார். அதன்படி இரண்டாவதி இன்னிங்ஸில் சதமடித்ததன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 31 சதங்களை அடித்த இரண்டாவது வீரர் எனும் பெருமையை கேன் வில்லியம்சன் படைத்துள்ளார். முன்னதாக இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 165 இன்னிங்ஸில் 31 சதங்களை அடித்து இப்பட்டியளில் முதலிடத்தில் உள்ளார்.

அதில் தற்போது 170 இன்னிங்ஸில் 31 டெஸ்ட் சதங்களை அடித்து கேன் வில்லியம்சன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். அதேபோல் ஒரு டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் சதமடித்த 5ஆவது நியூசிலாந்து வீரர் எனும் பெருமையையும் கேன் வில்லியம்சன் பெற்றுள்ளார். அதன்படி அவருக்கு முன்னதாக கிளென் டர்னர், ஜெஃப் ஹோவர்த், ஆண்ட்ரூ ஜோன்ஸ், பீட்டர் ஃபுல்டன் ஆகியோர் ஒரே டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் சதங்களை விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை