டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்டீவ் ஸ்மித் சாதனையை முறியடித்த கேன் வில்லியம்சன்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 32 சதங்களை பதிவுசெய்த வீரர் எனும் ஸ்டீவ் ஸ்மித்தின் சாதனையை முறியடித்து கேன் வில்லியம்சன் புதிய சாதனை படைத்துள்ளார். முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் 174 இன்னிங்ஸில் 32 சதங்களை விளாசிய நிலையில் கேன் வில்லியம்சன் 172 இன்னிங்ஸில் 32 சதங்களை அடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
தென் ஆப்பிரிக்க அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து 1-0 என்ற கணக்கில் தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலைப் பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி ஹாமில்டனில் தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 242 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணியிலும் பேட்டர்கள் சரிவர விளையாடததால் 211 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அல் அவுட்டானது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 31 ரன்கள் முன்னிலைப் பெற்றது.
இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு டேவிட் பெட்டிங்ஹாம் சதமடித்து கைகொடுத்ததன் மூலம் அந்த அணி 235 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக டேவிட் பெட்டிங்ஹாம் 110 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் நியூசிலாந்து அணிக்கு இலக்காக 267 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணியில் டெவான் கான்வே, டாம் லேதம், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த கேன் வில்லியம்சன் சதமடித்தும், வில் யங் அரைசதம் கடந்தும் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியதுடன், அந்த அணிக்கு எதிராக முதல் முறையாக டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இப்போட்டியில் சதமடித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த கேன் வில்லியம்சன் தொடர்நாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இப்போட்டியில் கேன் வில்லியம்சன் அடித்த சதமானது அவரது 32ஆவது சர்வதேச டெஸ்ட் சதமாகும். இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 32 சதங்களை பதிவுசெய்த வீரர் எனும் ஸ்டீவ் ஸ்மித்தின் சாதனையை முறியடித்து கேன் வில்லியம்சன் புதிய சாதனை படைத்துள்ளார். முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் 174 இன்னிங்ஸில் 32 சதங்களை விளாசிய நிலையில் கேன் வில்லியம்சன் 172 இன்னிங்ஸில் 32 சதங்களை அடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
அதிவேகமாக 32 சதங்களை விளாசிய வீரர்கள்
- கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து)- 172 இன்னிங்ஸ்
- ஸ்டீவ் ஸ்மித்(ஆஸ்திரேலியா) - 174 இன்னிங்ஸ்
- ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா)- 176 இன்னிங்ஸ்
- சச்சின் டெண்டுல்கர் (இந்தியா)- 179 இன்னிங்ஸ்
- யூனிஸ் கான் (பாகிஸ்தான்)- 183 இன்னிங்ஸ்