நியூசிலாந்து அணிக்காக வரலாறு படைக்க காத்திருக்கும் கேன் வில்லியம்சன்!

Updated: Tue, Mar 04 2025 17:28 IST
Image Source: Google

பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் முன்னேறியுள்ளன.

இதில் நாளை நடைபெறும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியும், மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடபெறவுள்ளது. நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இவ்விரு அணிகளும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளன

இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இந்த அரையிறுதி போட்டியின் மூலம் நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் சிறப்பு சாதனை ஒன்றை படைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். 

அதன்படி இப்போட்டியில் கேன் வில்லியம்சன் 27 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 19ஆயிரம் ரன்களைப் பூர்த்தி செய்வார். இந்த மைல் கல்லை எட்டும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணிக்காக 19ஆயிரம் ரன்களை விளாசிய முதல் வீரர் எனும் வரலாறை படைப்பார். இதுவரை நியூசிலாந்து அணிக்காக கேன் வில்லியம்சன் 369 போட்டிகளில் 439 இன்னிங்ஸ்களில் விளையாடி 18, 973 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: Funding To Save Test Cricket

நியூசிலாந்திற்காக அதிக சர்வதேச ரன்களை எடுத்ததன் அடிப்படையில், வில்லியம்சனுக்கு அடுத்தபடியாக, அந்த அணியின் முன்னாள் வீரர் ராஸ் டெய்லர் 450 போட்டிகளில் 510 இன்னிங்ஸ்களில் விளையாடி 18,199 ரன்கள் எடுத்து இரண்டாம் இடத்தில் உள்ளார்.  தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கேன் வில்லியம்சனின் பேட்டிங் ஃபார்ம் சிறப்பாக இருந்துள்ளது. அவர் இதுவரை, அந்த அணிக்கு எதிராக 18 ஒருநாள் இன்னிங்ஸ்களில் 57.35 சராசரியில் 803 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அவர் மூன்று சதங்கள் மற்றும் மூன்று அரை சதங்களையும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை