NZ vs SA, 2nd Test: மீண்டும் சதம் விளாசிய வில்லியம்சன்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது நியூசிலாந்து!
நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 242 ரன்களையும், அதைத்தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 211 ரன்களிலும் என ஆல் அவுட்டானது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 31 ரன்கள் முன்னிலைப் பெற்றது.
இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணியில் டேவிட் பெட்டிங்ஹாம் தனது முதல் சர்வதேச டெஸ்ட் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். ஆனால் அணியின் மற்ற வீரர்கள் பெரிதளவில் சோபிக்காததால் இரண்டாவது இன்னிங்ஸில் அந்த அணி 235 ரன்களில் ஆல் அவுட்டானது. நியூசிலாந்து அணி தரப்பில் வில்லியம் ஓ ரூர்க் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனால் நியூசிலாந்து அணிக்கு 267 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர் டெவான் கான்வே 17 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 40 ரன்களை எடுத்தது. இதையடுத்து இன்று தொடங்கிய நான்காம் நால் ஆட்டத்தை டாம் லேதம் 21 ரன்களுடனும், கேன் வில்லியம்சன் ரன்கள் ஏதுமின்றியும் இன்னிங்ஸைத் தொடங்கினர்.
இதில் 30 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் டாம் லேதம் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்ப, அடுத்து களமிறங்கிய ரச்சின் ரவீந்திராவும் 20 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து வில்லியம்சன்னுடன் இணைந்த வில் யங் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் இணைந்து அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன், தேவையான ரன்களையும் சேர்த்து வந்தனர்.
இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நியூசிலாந்தின் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் சர்வதேச டெஸ் கிரிக்கெட்டில் தனது 32ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். மேலும் இத்தொடரில் கேன் வில்லியம்சன் அடிக்கும் மூன்றாவது சதம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. அவருக்கு துணையாக விளையாடிய வில் யங்கும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேன் வில்லியம்சன் 12 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 133 ரன்களையும், வில் யங் 8 பவுண்டரிகளுடன் 60 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் நியூசிலாந்த் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியதுடன், 2-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்க அணிக்கெதிராக முதல் முறையாக நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளது.