ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி அலறவிட்ட கார்த்திக் மெய்யப்பன் - வைரல் காணொளி!
முதல் ஆட்டத்தில் நமீபியாவுடன் தோற்ற இலங்கை அணி, 2ஆவது போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் முதல் ஆட்டத்தில் தோற்றதால் இப்போட்டியில் முதல் வெற்றியைப் பெறும் ஆர்வத்தில் உள்ளன.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்களை மட்டுமே எடுத்தது.
இந்த ஆட்டத்தின் 15ஆவது ஓவரை வீசிய கார்த்திக் மெய்யப்பன் ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். பனுகா ராஜபக்ஷா, சரி அசலங்கா, தசுன் ஷனகா என மூன்று முக்கிய பேட்டர்களின் விக்கெட்டுகளை அடுத்தடுத்த பந்துகளில் எடுத்து சாதனை செய்தார்.
மேலும் டி20 உலக கோப்பையில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய 5ஆவது பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார் கார்த்திக் மெய்யப்பன். இதற்கு முன்னதாக பிரெட் லி (2007), வநிந்து ஹசரங்கா (2021), காகிசோ ரபாடா (2021), கர்டிஸ் காம்பெர் (2021) ஆகியோர் வரிசையில் தற்போது கார்த்திக் மெய்யப்பனும் இணைந்துள்ளார்.
மேலும் இப்போட்டியில் மொத்தம் 4 ஓவர்கள் வீசிய கார்த்திக் மெய்யப்பன் வெறும் 19 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்நிலையில் இவர் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் பிறந்த கார்த்திக் மெய்யப்பன், கடந்த 2012ஆம் ஆண்டு முதல் துபாயில் வசித்து வருகிறார். இவர் முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உள்ளிட்ட அணிகளுக்கு வலைபந்து விச்சாளராகவும் செயல்பட்டார். தற்போது இலங்கை அணிக்கு எதிராக விளையாடி ஹாட்ரிக் எடுத்து கவனத்தை ஈர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.