செப்டம்பரில் தொடங்வுள்ள கேரளா கிரிக்கெட் லீக் டி20 - கேசிஏ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Updated: Fri, Aug 09 2024 20:19 IST
Image Source: Google

சர்வதேச அளவில் டி20 கிரிக்கெட் மீதான ரசிகர்களில் எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல், ஆஸ்திரேலியாவின் பிக் பேஷ் லீக், பாகிஸ்தானின் பாகிஸ்தான் சூப்பர் லீக், தென் ஆப்பிரிக்காவின் எஸ்ஏ20 லீக், விண்டீஸின் கரீபியன் பிரீமியர் லீக் ஆகியவற்றுடன் ஐஎல்டி20, மேஜர் லீக் கிரிக்கெட், டி20 பிளாஸ்ட், லங்கா பிரீமியர் லீக் என ஒவ்வொரு நாடும் தங்களுக்கான டி20 கிரிக்கெட் தொடர்களை நடத்தி வருகின்றன. 

அதிலும் குறிப்பாக இந்தியாவில் ஐபிஎல் டி20 தொடரை தவிர்த்து, தமிழ்நாடு, கர்நாடகா, டெல்லி, பாண்டிச்சேரி, மகாராஷ்டிரா, பஞ்சாப், மேற்கு வங்கம், மும்பை போன்ற பல்வேறு மாநிலங்களிலும் அந்தந்த மாநில கிரிக்கெட் சங்கங்கள் சார்பில் டி20 தொடரை நடத்தி வருவதுடன் இளம் வீரர்களையும் இந்திய அணிக்கு கண்டறிவதற்கு உதவியாக இருந்து வருகிறது. இதில் மிகவும் புகழ்பெற்ற தொடராக தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடரானது இருந்து வருகிறது. 

இந்நிலையில் இதனை பின்பற்றி அண்டை மாநிலமான கேரளாவும் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரை நடத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி 6 அணிகள் பங்கேற்கும் கேரளா கிரிக்கெட் லீக் டி20 தொடர் என்ற புதிய தொடரை கேரள கிரிக்கெட் சங்கம் இன்று அறிமுகம் செய்துள்ளது. அதனடிப்படையில் இத்தொடரின் முதல் சீசனானது வரும் செப்டம்பர் மாதம் 02ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரையிலும் திருவனந்தபுரத்தில் உள்ள க்ரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானத்தில் நடத்தவுள்ளதாகவும் அறிவித்துள்ளது. 

மேற்கொண்டு இன்று நடைபெற்ற தொடரின் அறிமுக விழாவில் பங்கேற்ற இந்திய அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் இத்தொடருக்கான இலச்சினையை வெளியிட்டார். மேற்கொண்டு இத்தொடருக்கான வீரர்கள் ஏலம் நாளைய தினம் (ஆகஸ்ட் 10) நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வீரர்கள் ஏலத்திற்காக 168 வீரர்கள் இறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும், அதிலிருந்து ஒவ்வொரு அணியும் 20 வீரர்களை தேர்வு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

இதுகுறித்து கேரளா கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேரளா கிரிக்கெட் லீக் டி20 தொடரில் ஒவ்வொரு நாளும் பகல் மற்றும் இரவு போட்டிகள் உட்பட இரண்டு ஆட்டங்களை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம். மேலும் புகழ்பெற்ற நடிகரும் கேரளா கிரிக்கெட் லீக் தொடரின் தூதருமான மோகன்லால், ஆகஸ்ட் 31, 2024 அன்று மதியம் 12 மணிக்கு ஹயாட் ரீஜென்சியில் இத்தொடரை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைப்பார்” என்றும் தெரிவித்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை