மைதானத்திற்கு வெளியே பறந்த சிக்சர்; கேஎல் ராகுல் அபாரம்!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இந்தியாவில் நடைபெற்றுபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்திய கிரிக்கெட் அணி ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. மறுபுறம் தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலியா இன்று இந்தூரில் நடைபெற்றுவரும் 2ஆவது போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய நிலையில் டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
இத்தொடர்ந்து பேட்டிங் செய்த இந்தியாவுக்கு ஆரம்பத்திலேயே ருதுராஜ் கெய்க்வாட் 8 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்த போதிலும் அடுத்ததாக வந்த ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக விளையாடி ர்ன்களை சேர்த்தார். குறிப்பாக காயத்திலிருந்து குணமடைந்த பின் தடுமாறி வந்த அவர் இந்த போட்டியில் ஃபார்முக்கு திரும்பி கில்லுடன் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 200 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து 11 பவுண்டரி 3 சிக்சருடன் சதத்தை விளாசி 105 ரன்கள் குவித்து அவுட்டானார்.
மறுபுறம் ஏற்கனவே நல்ல ஃபார்மில் இருக்கும் ஷுப்மன் கில் தொடர்ந்து அட்டகாசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 6 பவுண்டரி 4 சிக்சருடன் 104 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து வந்த கேப்டன் கேஎல் ராகுல் கேமரூன் கிரீன் வீசிய 35ஆவது ஓவரின் 3வது பந்தை அதிரடியாக எதிர்கொண்ட முழு பவர் கொடுத்து வேகமாக அடித்தார்.
குறிப்பாக பிட்ச்சான பின் பவுன்ஸாகி சரியான கோணத்தில் வந்த அந்த பந்தை மிகச்சிறப்பான டைமிங் மற்றும் பவர் கொடுத்து அடித்த ராகுல் இந்தூர் மைதானத்தை தாண்டி வெளியே சென்று விழும் அளவுக்கு மெகா சிக்சரை பறக்க விட்டு ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தினார். அதிலும் குறிப்பாக ஜாம்பவான் கபில் தேவ் என்று பெயர் சூட்டப்பட்டிருந்த ஸ்டேண்டை கடந்து அந்த பந்தை ராகுல் அடித்தது ரசிகர்கள் மற்றும் வர்ணையாளர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்தது.
தொடர்ந்து அவரும் அரைசதம் கடக்க, இறுதியில் சூர்யகுமார் யாதவும் 72 ரன்களைச் சேர்த்து ஃபீனீஷிங் கொடுத்தார். இதன்மூலம் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்களை குவித்தது. இந்நிலையில் கேஎல் ராகுல் அடித்த இமாலய சிக்சர் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.