சிறுவனின் மருத்துவ செலவிற்கு நிதி வழங்கிய கேஎல் ராகுல்!
இந்திய அணியில் முன்னணி வீரராக வலம் வரும் கேஎல் ராகுல் சமீபத்தில் தான் அணியின் துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் கேஎல்ல் ராகுலால் சரிவர தொடர்ந்து அணியில் பங்கேற்று விளையாட முடியவில்லை.
தங்கையின் திருமணத்திற்காக முதலில் சில போட்டிகளில் இருந்து வெளியேறிய கேஎல் ராகுல் பின்னர் காயத்தின் காரணமாக ஒட்டுமொத்த டி20 தொடரில் இருந்தும் வெளியேறினார். அடுத்து வரக்கூடிய இலங்கை தொடரில் கூட அவரால் பங்கேற்க முடியாமல் போயுள்ளது. அவரின் சிறப்பான பேட்டிங்கை காண முடியாமல் ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் கிரிக்கெட்டை விட அவரின் மனம் அனைத்து ரசிகர்களையும் வென்றுள்ளது. 11 வயதே ஆகும் வாரத் எனும் சிறுவனுக்கு எலும்பு மஜ்ஜையில் பிரச்சினை இருந்துள்ளது. இதனால் அவரின் ரத்த அளவு மிகக்குறைவாக இருக்கும். சிறிய காயம், காய்ச்சல் வந்தால் கூட குணமடைய ஒரு மாதத்திற்கும் மேல் ஆகும்.
ஒரு கிரிக்கெட் வீரராக வலம் வர வேண்டும் என்ற மகனின் ஆசைக்காக மருத்துவ செலவுகளுடன் சேர்த்து கிரிக்கெட்டிற்கும் அனுப்பி வருகிறார் வாரத்தின் தந்தை. ஆனால் காயம் தான் பெரிய பிரச்சினையாக உள்ளது. இந்த பிரச்சினைக்கு ஒரே தீர்வு எலும்பு மஜ்ஜையை மாற்ற வேண்டும் என்பது தான்.
எனவே "கிவ் இந்தியா" ( Give India) என்ற அமைப்பின் மூலம் நிதி திரட்ட ஆரம்பித்துள்ளனர். ஆனால் அவர்களால் ரூ.4 லட்சம் மட்டுமே சேகரிக்க முடிந்தது. இந்நிலையில் இதனை அறிந்த கே.எல்.ராகுல் உடனடியாக ரூ.31 லட்சத்தை அனுப்பிவிட்டு சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்துள்ளார். ஆனால் இது ஊடகங்களுக்கு தெரியக்கூடாது என்பதிலும் தெளிவாக இருந்துள்ளார். ஆனால் தற்போது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து பேசிய கே.எல்.ராகுல், வாரத்தின் நிலைமை குறித்து தெரிந்தவுடன் உடனடியாக எனது குழு கிவ் இந்தியா அமைப்பை தொடர்பு கொண்டு ஏற்பாடுகளை செய்தது. அவரின் அறுவை சிகிச்சையும் தற்போது சிறந்த முறையில் முடிந்துள்ளது. இனி வாரத் தனது கனவை நோக்கி பயணிக்க எந்த தடையும் இருக்காது. என்னைப்போன்றே பல வீரர்களும் இதே போன்று உதவ முன் வர வேண்டும் எனவும் கே.எல்.ராகுல் கோரிக்கை வைத்துள்ளார்.