ஐபிஎல் 2021: பந்துவீச்சாளர்களை புகழ்ந்த கேஎல் ராகுல்!
ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று இரவு சார்ஜாவில் நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணியை 5 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 20 ஓவரில் 7 விக்கெட்டுகளுக்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக மார்க்ராம் 27 ரன் எடுத்தார். ஐதராபாத் தரப்பில் ஹோல்டர் 3 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் விளையாடிய ஐதராபாத் அணி விக்கெட்டுகளை இழந்து திணறியது. சகா, (31 ரன்) ஹோல்டர் (47 ரன்) ஆகியோர் தாக்கு பிடித்து விளையாடினர். கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன் தேவைப்பட்டது. இதில் 11 ரன்னே எடுக்கப்பட்டது.
பஞ்சாப் தரப்பில் ரவி பிஷ்னோய் 3 விக்கெட்டும், முகமது ஷமி 2 விக்கெட்டும் வீழ்த்தினர் பஞ்சாப் அணி பெற்ற 4ஆவது வெற்றி இதுவாகும். இதன் மூலம் அந்த அணி பிளே-ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது. 8ஆவது தோல்வியை சந்தித்த ஐதராபாத் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது.
இந்த வெற்றி குறித்து பஞ்சாப் அணி கேப்டன் லோகேஷ் ராகுல் கூறிகையில், “இந்த வெற்றி மூலம் பஞ்சாப் கிங்ஸ் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்று நம்புகிறேன். ஹோல்டர் அற்புதமாக விளையாடினார். அவர் ஒரே ஓவரில் என்னையும் மயங்க் அகர்வாலையும் அவுட் செய்தார். பேட்டிங்கையும் சிறப்பாக செய்தார். ஆடுகளத்தில் வேகம் இல்லை. நீங்கள் ஒரு நல்ல ஸ்கோரை எடுத்தால் எதிரணிக்கு நெருக்கடி கொடுக்கலாம்.
இந்த ஆடுகளம் 160-170 ரன் எடுக்கும் ஆடுகளம் அல்ல என்பதும் அதிக ஷாட்டுகளை விளையாட கூடாது என்பதும் பேட்ஸ்மேன்களுக்கான பாடம். இதை யாராவது உணர்ந்து இருந்தால் நாங்கள் 140 ரன் எடுத்திருக்கலாம். எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். முகமது ஷமி தொடக்கத்திலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
ஹர்பீர்த் பிரார் ஒரு சிறந்த ஆல்-ரவுண்ட் கிரிக்கெட் வீரர் என்று நான் நினைக்கிறேன். அவர் எங்களுக்காக ஆட்டத்தை முடித்து வைத்தார். அவர் உயரமான பந்து வீச்சாளர். அவரது பந்தில் அடித்து விளையாடுவது எளிதானதல்ல. ஒவ்வொரு முறையும் அவருடன் நான் செல்லும் போது, கவலைப்படாதே நான் ரன்களை விட்டு கொடுக்க மாட்டேன் என்று கூறுவார்” என தெரிவித்தார்.