ஐபிஎல் 2022: சதங்களில் சாதனைப் படைத்த கேஎல் ராகுல்!
ஐபிஎல் தொடரின் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. அதில் அதிகபட்சமாக கேப்டன் கே.எல்.ராகுல் 62 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து அட்டமிழக்காமல் இறுதி வரையில் களத்தில் இருந்தார்.
இதனைத்தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 132 மட்டுமே எடுத்தது. இதனால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குறிப்பாக நடப்பு ஐபிஎல்லில் தொடர்ந்து 8 வது தோல்வியை மும்பை அணி பெற்றது.
இந்நிலையில் இப்போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் சதம் விளாசியதன் மூலம் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக மூன்று சதங்களை விளாசிய முதல் வீரர் எனும் சாதனையையும், ஒரு அணிக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த வீரர் எனும் சாதனையையும் படைத்துள்ளார்.
மேலும் ஒரு சீசனில் அதிக சதங்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் கிறிஸ் கெயில், ஷேன் வாட்சன், ஷிகர் தவான் ஆகியோருடன் இணைந்துள்ளார். இப்பட்டியலில் நட்சத்திர வீரர் விராட் கோலி 4 சதங்களை விளாசி முதலிடத்தில் உள்ளார்.