லார்ட்ஸ் ஹானர்ஸ் போர்டில் இடம்பிடித்த ராகுல்!
இந்தியா - இங்கிலாந்துக்கு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டிரா ஆன நிலையில், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 2-வது டெஸ்ட் நடைபெற்றது. இந்த டெஸ்டில் இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியத் தொடக்க வீரராக கே.எல். ராகுல் சிறப்பாக விளையாடி வருகிறார். முதல் டெஸ்டில் 84, 26 என ரன்கள் எடுத்த ராகுல், லார்ட்ஸ் டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 129 ரன்கள் எடுத்து அசத்தினார். இதனால் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.
இந்நிலையில் லார்ட்ஸ் மைதானத்தில் சதமடித்தாலோ அல்லது 5 விக்கெட்டுகளை கைப்பற்றினாலே ஹானர்ஸ் போர்ட் எனப்படும் பலகையில் அவர்களது பெயர் இடம்பெறும்.
அதன்படி 2014ஆம் ஆண்டில் ரஹானே சதமடித்து ஹானர்ஸ் போர்டில் இடம் பிடித்தார். அதேபோல் இம்முறை லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் சதமடித்த காரணத்தால் கே.எல். ராகுலின் பெயர் ஹானர்ஸ் போர்டில் இடம்பெற்றுள்ளது.
இதன் புகைப்படம், லார்ட்ஸ் மைதானத்தின் இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.