கேஎல் ராகுலின் தேர்வை விமர்சித்த வெங்கடேஷ் பிரசாத்!

Updated: Sun, Feb 12 2023 09:48 IST
K.L Rahul's Performances Have Been Well Below Par: Venkatesh Prasad (Image Source: Google)

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இரு அணிகளிலும் சேர்த்தே ரோஹித், ஜடேஜா, அக்ஸர் படேல் ஆகிய மூவர் மட்டும்தான் சிறப்பாக பேட்டிங் ஆடினார்கள்.

ரோஹித் சர்மா அபாரமாக ஆடி சதமடித்தார். ரோஹித் 120 ரன்களை குவித்தார். ஜடேஜா 70 ரன்களும், அக்ஸர் படேல் 84 ரன்களும் அடித்தனர். முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி வெறும் 177 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, ரோஹித்தின் சதம் மற்றும் ஜடேஜா, அக்ஸர் படேலின் அரைசதங்களால் இந்திய அணி 400 ரன்களை குவித்தது. 223 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2ஆவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி வெறும் 91 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பாக இந்திய அணியின் தொடக்க வீரராக ரோஹித்துடன் ராகுல் - கில் ஆகிய இருவரில் யார் இறங்குவார் என்பது பெரிய கேள்வியாக இருந்தது. ராகுல் ஃபார்மில் இல்லாமல் நீண்டகாலமாகவே சொதப்பிவரும் அதேவேளையில், ஷுப்மன் கில் அண்மைக்காலத்தில் டாப் ஃபார்மில் உள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஒரு இரட்டை சதம் மற்றும் சதம் அடித்து அசத்தினார்.  ஷுப்மன் கில் நல்ல ஃபார்மில் இருப்பதால் அவரை புறக்கணிக்கமுடியாத சூழல் இருந்தது. அவரைத்தான் ரோஹித்துடன் தொடக்க வீரராக இறக்க வேண்டும் என்ற வலியுறுத்தல்களும் எழுந்தன.

ஆனாலும் முதல் டெஸ்ட்டில் ரோஹித்துடன் ராகுல் தான் தொடக்க வீரராக இறக்கப்பட்டார். அதற்கு அவர் துணை கேப்டன் என்பதும் ஒரு காரணம். அதனால் அவரை புறக்கணிக்க முடியாத சூழல் உள்ளது. ஆனால் ராகுல் படுமந்தமாக பேட்டிங் ஆடி 20 ரன்கள் மட்டுமே அடித்து சொதப்பினார். ராகுலின் பேட்டிங் அணுகுமுறை கடும் விமர்சனத்துக்குள்ளானது. தொடர்ச்சியாக சொதப்புவதால் அணியில் அவரது இடம் சந்தேகமாகியுள்ளது.

இந்நிலையில், ராகுலின் தேர்வே பாரபட்சமானது என்று வெங்கடேஷ் பிரசாத் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “கேஎல் ராகுல் திறமையான பேட்ஸ்மேன் தான். ஆனால் அண்மைக்காலமாக அவரது ஆட்டம் படுமோசமாக உள்ளது. 8 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிவரும் கேஎல் ராகுல் 46 டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருக்கும் அவரது சராசரி வெறும் 34 ஆகும். இவர் அளவிற்கு வேறு எந்த வீரருக்கும் அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்டதாக தெரியவில்லை. 

டாப் ஃபார்மில் உள்ள பல வீரர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். ஷுப்மன் கில் டாப் ஃபார்மில் உள்ளார். சர்ஃபராஸ் கான் முதல் தர கிரிக்கெட்டில் ஏகப்பட்ட ரன்களை குவித்துள்ளார். அவர் ராகுலைவிட இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க தகுதியான வீரர். சிலருக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படுகின்றனர். சிலருக்கு வாய்ப்பே வழங்கப்படுவதில்லை.

ஃபார்மிலேயே இல்லாத, சரியாக ஆடாத ராகுலை துணை கேப்டனாக நியமித்ததே சரியல்ல. அஷ்வின் மிகச்சிறந்த கிரிக்கெட் மூளை. அவர்தான் டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். அஷ்வின் இல்லையென்றால், புஜாரா அல்லது ஜடேஜாவை துணை கேப்டனாக நியமித்திருக்கலாம். டெஸ்ட் கிரிக்கெட்டில் ராகுலை விட மயன்க் அகர்வால் மற்றும் ஹனுமா விஹாரி ஆகிய இருவரும் சிறப்பாக விளையாடியிருக்கின்றனர்.

ராகுல் அவரது ஆட்டத்திறனுக்காக தேர்வு செய்யப்படவில்லை. அவரது தேர்வு பாரபட்சமாக அமைந்துள்ளது. 8 ஆண்டுகளாக ஆடும் கேஎல் ராகுல் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. இத்தனை ஆண்டுகள் ஆடும் வீரர் மாதிரி அவர் ஆடவில்லை” என்று  கடுமையாக விமர்சித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை