அடுத்தடுத்த போட்டிகளில் அவர் சிறப்பாக செயல்படுவார் - ஷிகர் தவான்
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் அறிமுக வீரர் பிரித்வி ஷா கோல்டன் டக்-ஆனார். அடுத்து ஷிகர் தவன் (46), சூர்யகுமார் யாதவ் (50) இருவரும் சிறப்பாக விளையாடியதால், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 164/5 ரன்கள் சேர்த்தது.
இலக்கைத் துரத்திக் களமிறங்கிய இலங்கை அணியில் அசலங்கா (44) மட்டுமே சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தார். மற்ற பேட்ஸ்மேன்களில் ஒருவர் மட்டுமே அதிகபட்சமாக 26 ரன்கள் அடித்தார். இதனால், இலங்கை அணி 18.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து126 ரன்களை மட்டும் சேர்த்து, 38 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இப்போட்டிக்கு பிறகு பேசிய ஷிகர் தவன்“நாங்கள் 10, 15 ரன்கள் குறைவாக அடித்திருந்தோம் எனக் கருதுகிறேன். சில விக்கெட்களை விரைவாக இழந்தபோதிலும், இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி, அந்த அழுத்தத்திலிருந்து மீண்டு வந்தார்கள். குறிப்பாக சூர்யகுமார் யாதவ் மிக பிரமாதமாக விளையாடினார்.
இலங்கை பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டார். அவருடைய ஆட்டத்தை நாங்கள் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தோம். சிறப்பான முறையில் ஷாட்களை ஆடினார். இந்திய ஸ்பின்னர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர். குறிப்பாக, புதுமுக வீரர் வருண் சக்ரவர்த்தி பந்தை சிறப்பாகச் சுழற்றி, சில ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து விக்கெட்டையும் வீழ்த்தினார்.
புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் எவ்வித குறையும் இல்லை. பிரித்வி ஷா முதல் போட்டியில் சொதப்பிவிட்டார். அடுத்தடுத்த போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடுவார் என நம்புகிறோம்” எனக் கூறினார்