ஐபிஎல் 2025: கேகேஆர் அணியின் கேப்டனாக அஜிங்கியா ரஹானே நியமனம்?
ஐபிஎல் 18ஆவது சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலமானது கடந்த நவம்பர் 24, 25ஆம் தேதிகளில் சௌதீ அரேபியாவில் உள்ள ஜித்தா நகரில் நடைபெற்றது. நடைபெற்று முடிந்த வீரர்களுக்கான மெகா ஏலத்தில் அதிகபட்சமாக இந்திய அணியைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தை ரூ.27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
அதற்கு முன்னர் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயரை ரூ.26.76 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணிஏலம் எடுத்திருந்தது. இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் எனும் சாதனைகளையும் படைத்தனர். இதுதவிர்த்து, யாரும் எதிா்பாராத வகையில் இந்திய வீரா் வெங்கடேஷ் ஐயா் ரூ.23.75 கோடிக்கு கொல்கத்தா அணியால் வாங்கப்பட்டாா். இருப்பினும் நட்சத்திர வீரர்கள்டேவிட் வார்னர், பிரித்வி ஷா, கேன் வில்லியம்சன், ஆகியோரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டவில்லை.
அதேசமயம் இந்த வீரர்கள் ஏலத்தில் இந்திய அணியின் மூத்த வீரர் அஜிங்கியா ரஹானேவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது அவரது அடிப்படை விலையன ரூ.1.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. முன்னதாக கடந்த சில சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக டாப் ஆர்டரில் சிறப்பாக செயல்பட்ட ரஹானேவை, இந்த ஏலத்திற்கு முன்னதாக சிஎஸ்கே அணி நிர்வாகம் அணியில் இருந்து விடுவித்திருந்தது. அவர் தற்போது 36 வயதை எட்டியது முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது.
இருப்பினும் உள்ளூர் போட்டிகளில் ரஹானே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதிலும் நடைபெற்றுவரும் சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வரும் ரஹானே பேட்டிங்கில் அணிக்கு தேவையான ரன்களைச் சேர்த்து வருகிறார். இதுதவிர்த்து இபிஎல் தொடரில் இதுவரை 185 போட்டிகளில் விளையாடி 2 சதம், 30 அரைசதங்கள் என 4642 ரன்களை குவித்துள்ளார். மேலும் அவரது சராசரியானது 30.1ஆகவும் உள்ளது.
மேலும் அஜிங்கியா ரஹானேவின் அனுபவத்தை கருத்தில் கொண்டே கேகேஆர் அணியானது அவரை இந்த ஏலத்தில் எடுத்தது. இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக அஜிங்கியா ரஹானே நியமிக்கப்படவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக கடந்த சீசனில் கேகேஆர் அணிக்கு சாம்பியன் பட்டம் வென்று கொடுத்த ஸ்ரேயாஸ் ஐயரை அந்த அணி நிர்வாகம் ஏலத்திற்கு முன்னரே அணியில் இருந்து விடுவித்தது.
மேற்கொண்டு ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸல், சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ரானா உள்ளிட்டோரை மட்டுமே கேகேஆர் அணி தக்கவைத்தது. மேலும் ஐபிஎல் ஏலத்தி வெங்கடேஷ் ஐயரை மிகப்பெரும் தொகைக்கொடுத்து ஏலத்தில் எடுத்ததன் காரணமாக அவர் தான் அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரஹானேவின் கேப்டன்சி அனுபவம் காரணமாக தாற்போது கேகேஆர் அணி இம்முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
Also Read: Funding To Save Test Cricket
இதற்கு முன் ஐபிஎல் தொடரில் ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளின் கேப்டனாக அஜிங்கியா ரஹானே செயல்பட்டுள்ளார். இதுதவிர்த்து உள்ளர் போட்டிகளில் மும்பை அணியின் கேப்டனாகவும், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் ரஹானே செயல்பட்டுள்ளார். அதிலும் குறிப்பாக ரஹானே தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரையும் வென்றது குறிப்பிடத்தக்கது.