ஐபிஎல் 2022: ஹைதராபாத்தை பந்தாடி பிளே ஆஃப் கனவை பிரகாசமாக்கிய கேகேஆர்!

Updated: Sat, May 14 2022 23:24 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்கும் அழுத்தத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி முதலில் பேட்டிங் செய்யதீர்மானித்து.

கொல்கத்தா அணியின் ஓப்பனர்களாக வெங்கடேஷ் அய்யர், ரகானே களமிறங்கினர். இருவரும் அதிரடியாக தலா ஒரு பவுண்டரி விளாச, திடீரென மார்கோ ஜான்சன் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி அதிர்ச்சி அளித்தார் வெங்கடேஷ்.

அடுத்து வந்த நிதிஷ் ரானா நிதானமாக துவங்கி, அதிரடியாக நடராஜன் ஓவரிலேயே பவுண்டரி, சிக்ஸர்களாக விளாசி வான வேடிக்கை காட்டினார். மார்கோ ஜான்சன் வீசிய ஓவரிலும் 2 சிக்ஸர்களை ரானா அடித்து அசத்தினார். இந்த வேகத்திற்கு தன் அதிவேகம் மூலம் ஸ்பீட் ப்ரேக்கர் போட்டார் உம்ரான் மாலிக். நிதிஷ் ரானாவை பெவிலுயனுக்கு அனுப்பிவைத்து விட்டு, அவருக்கு துணையாக ரகானேவையும் அதே ஓவரில் விடைகொடுத்தார் உம்ரான்.

அடுத்து வந்த ஸ்ரேயாஷ் அய்யர், சாம் பில்லிங்ஸ் இணை நெருக்கடியை உணர்ந்து பொறுமையாக விளையாடத் துவங்கியது. ஆனால் அங்கும் வில்லனாக வந்த உம்ரான், ஸ்ரேயாஸ் விக்கெட்டை காலி செய்தார். அடுத்து வந்த ரிங்கு சிங்கை எல்பிடபுள்யூ ஆக்கி நடராஜன் வெறியேற்ற கொல்கத்தா அணியின் டாப் ஆர்டர் மொத்தமாக வீழ்ந்தது. அதாவது 94 ரன்களுக்குள் அந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அடுத்து வந்த ரஸ்ஸல் ஏதுவான பந்துகளை மட்டும் எல்லைக் கோட்டுக்கு விரட்டி அதிரடி காட்டினார். மற்ற பந்துகளில் கட்டைப் போட்டார்.

நடராஜன் ஓவரில் ரஸல் சிக்ஸர் விளாச, உம்ரான் ஓவரில் பில்லிங்ஸ் பவுண்டரிகளை விளாசியதால் ஸ்கோர் மீண்டும் உயரத் துவங்கியது. சிக்கன பவுலராக இந்த சீசனில் வலம்வரும் புவனேஷ்வர் குமார் பந்துவீச்சிலும் இந்த கூட்டணி பவுண்டரிகளை விரட்ட தவறவில்லை. இருப்பினும் அவரது பந்துவீச்சில் இந்த அதிரடிக் கூட்டணிக்கு முடிவுரை எழுதப்பட்டது. பில்லிங்ஸ் அவுட்டாகி வெளியேற, அடுத்து வந்த சுனில் நரைன் நிதானமாக விளையாடினார்.

அதிவேக பவுலர்களை எல்லாம் முன்னரே பயன்படுத்தி விட்டதால் கடைசி ஓவரை ஸ்பின்னர் வாஷிங்டன் சுந்தர் வீச வைத்தார் கேப்டன் வில்லியம்சன். ஆனால் இதை சரியாக பயன்படுத்தி ரஸ்ஸல் ருத்ர தாண்டவம் ஆடினார். மூன்று சிக்ஸர்களை விளாசி ரஸ்ஸல் அமர்களப்படுத்தியதால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 177 ரன்களை கொல்கத்தா அணி குவித்தது. 

இதையடுத்து இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் கேப்டன் கேன் வில்லியம்சன், ராகுல் திரிபாதி ஆகியோர் தலா 9 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர். 

பின்னர் ஜோடி சேர்ந்த அபிஷேக் சர்மா - ஐடன் மார்க்ரம் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அதன்பின் 43 ரன்களில் அபிஷேக் சர்மா ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 32 ரன்களில் ஐடன் மார்க்ரமும் விக்கெட்டை இழந்தார்.

அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் சரிவர விளையாடததால் 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்களை மட்டுமே சேர்த்தது. கேகேஆர் அணி தரப்பில் ரஸ்ஸல் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை