உலகக்கோப்பை நினைவுகள் குறித்து மனம் திறந்த ஸ்ரீகாந்த்!
கடந்த 1983ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் நாளை இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாது. கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்த நாள் இது.
அந்த இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் அப்போதைய ஜாம்பவானாக திகழ்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் இந்தியா அணி முதலில் பேட்டிங் செய்து 54.4 ஓவர்களில் 183 ரன்களை எடுத்தது.
இந்திய அணி சார்பில் கிரிஸ் ஸ்ரீகாந்த் 38 ரன்களும் அமர்நாத் 26 ரன்களும், சந்தூப் பாடில் 27 ரன்களும் கபில் தேவ் 15 ரன்களும் எடுத்தனர். அப்போதெல்லாம் ஒருநாள் போட்டி 60 ஓவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 52 ஓவரில் 140க்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.
இந்த இறுதிச்சுற்றில் இரு அணிகளிலும் அதிக ரன்கள் எடுத்தவர் ஸ்ரீகாந்த். 57 பந்துகளில் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 38 ரன்கள் எடுத்தார். இந்நிலையில் 1983 உலகக் கோப்பை அனுபவங்கள் பற்றி சென்னை சூப்பர் கிங்ஸ் இணையத்தளத்துக்கு ஸ்ரீகாந்த பேட்டியளித்தார்.
அதில் பேசிய அவர், “அப்போது ஒரு நல்ல விஷயம், எங்களுக்குப் பயிற்சியாளர் என யாரும் கிடையாது. எங்களுடைய மேலாளருக்கு கிரிக்கெட் பற்றி ஒன்றும் தெரியாது. இது பலவழிகளிலும் எங்களுக்கு உதவியது. யாரிடமிருந்தும் எங்களுக்கு எவ்வித அழுத்தமும் வரவில்லை.
நாங்கள் உடற்பயிற்சி செய்தது கிடையாது. நானும் சந்தீப் பாட்டிலும் எங்கள் வாழ்நாளில் உடற்பயிற்சியே செய்ததில்லை. சிலர் (மைதானத்தில்) நான்கு சுற்றுகள் செல்வார்கள். கிர்மானி கொஞ்சம் உடற்பயிற்சி செய்வார். கவாஸ்கர் உடற்பயிற்சி செய்து நான் பார்த்ததே கிடையாது. அவர் எவ்வளவு ரன்கள் எடுத்துள்ளார். இதெல்லாம் மனநிலை தொடர்புடையது.
சிலர் தனிப்பட்ட முறையில் உடற்பயிற்சி செய்வார்கள். அமர்நாத் ஓரளவு உடற்பயிற்சி செய்வார். நான் கொஞ்சம் சோம்பேறி. எனக்கு 62 வயது ஆகிறது. உடற்பயிற்சி செய்யுங்கள், நடை செல்லுங்கள் என என் மனைவி சொல்வார். நான் எப்போதும் இயற்கையாகவே நல்ல உடற்தகுதியுடன் இருப்பவன் தான் எனச் சொல்வேன்” என தெரிவித்துள்ளார்.