திலக் வர்மாவை உலகக்கோப்பை தொடரில் சேர்ப்பது சரியான முடிவாக இருக்காது - கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்!
இந்திய அணியின் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தின் போது அறிமுக வீரராக களமிறங்கிய திலக் வர்மா தன்னுடைய அபாரமான ஆட்டத்திறமை காரணமாக கிரிக்கெட் ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்டார். தனது அறிமுக தொடரிலேயே மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவரை உடனடியாக உலகக் கோப்பை அணியில் சேர்க்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.
கடந்த 2020ஆம் ஆண்டிற்கான அண்டர் 19 உலக கோப்பை அணியில் இடம் பெற்று விளையாடியவர் திலக் வர்மா. கடந்த இரண்டு சீசன்களாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சிறப்பான ஆட்டத்தை ஐபிஎல் தொடரில் வெளிப்படுத்தியிருந்தார். இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தின் போது டி20 அணியில் தேர்வு செய்யப்பட்டார். தான் சந்தித்த இரண்டாவது மற்றும் மூன்றாவது பந்துகளில் சிக்ஸர் அடித்து கிரிக்கெட் உலகையே அதிரசெய்தார். அதிரடி ஆட்டத்தோடு பக்குவமும் கலந்து சூழ்நிலைக்கு ஏற்றவாறு ஆடிய இவரது முதிர்ச்சி பல கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களின் கவனத்தையும் ஈர்த்தது.
இதனைத் தொடர்ந்து நடைபெற இருக்கும் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியிலும் ஆசியக் கோப்பை தொடரிலும் இவரை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்த நிலையில், ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இவர் நிச்சயமாக நடைபெற இருக்கின்ற உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியிலும் இடம் பெறுவார் என பல முன்னால் வீரர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் முன்னாள் தேர்வு குழு தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் இதற்கு எதிராக தனது கருத்தை பதிவு செய்து இருக்கிறார். திலக் வர்மா குறித்து பேசிய அவர், “திலக் வர்மா திறமையான வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை . இந்திய அணிக்கு வரும் காலங்களில் நட்சத்திர வீரராக வரக்கூடிய அத்தனை தகுதிகளும் அவருக்கு இருக்கிறது. ஆனாலும் அவரை உலகக்கோப்பை காண அணியில் தேர்ந்தெடுப்பது சரியான ஒரு முடிவாக இருக்காது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இது பற்றி தான் மட்டும் அப்படி கூறவில்லை என்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலியும் இதே கருத்தை தான் வலியுறுத்தி இருப்பதாக ஸ்ரீகாந்த் தெரிவித்திருக்கிறார். திலக் வர்மா போன்ற இளம் வீரர்கள் உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களுக்கு முன்பு ஒரு சில ஒரு நாள் போட்டி தொடர்களில் விளையாட வைக்க வேண்டும் . அவர்களை நேரடியாக உலகக் கோப்பையில் சென்று களம் இறக்க கூடாது என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்திருந்தார்.
இதே கருத்தை வலியுறுத்திய ஸ்ரீகாந்த் திலகர்மாவை அடுத்த ஐசிசி போட்டிக்கான வீரராக தற்போது இருந்தே தயார் படுத்துவது தான் சரியான முறையாக இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார். இவர் அடுத்த உலகக்கோப்பை காண வீரர் என்றும் தற்போதைய உலகக்கோப்பையில் அவர் இடம்பெறுவது சரியான முடிவு அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து பேசிய ஸ்ரீகாந்த், “அடுத்து நடைபெற இருக்கும் 2024 ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை மற்றும் 2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடும் வீரராக திலக் வர்மாவை உருவாக்க வேண்டும். அதற்குரிய கால அவகாசம் அவருக்கு கொடுக்கப்பட வேண்டும். அப்போது சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய அனுபவத்தை பெற்று மிகச் சிறந்த வீரராக அவர் உருவெடுப்பார். தற்போது அவரை அவசரமாக களம் இறக்குவதன் மூலம் அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்த கூடும்” என தெரிவித்திருக்கிறார்.
இந்திய அணியின் மிடில் ஆர்டரில் ரவீந்திர ஜடேஜா மட்டுமே இடது கை விரராக இருப்பதால் திலக வர்மாவும் இடம் பெற்றால் இந்திய அணியின் பேட்டிங் வரிசை மேலும் வலுப்படும் என பல கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்த நிலையில் ஸ்ரீகாந்தியின் கருத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாகவுள்ளது.