எங்களது மோதல் வெறும் 2 நிமிடங்களில் முடிந்து விடும் - குர்னால் பாண்டியா!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 51ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அதன்படி இந்த போட்டியில் டாசில் வெற்றிபெற்ற லக்னோ அணியின் கேப்டன் குர்னால் பாண்டியா தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார். அதன்படி முதலில் விளையாடிய குஜராத் அணியானது தொடக்கத்திலிருந்தே அதிரடி காட்ட நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் இரண்டு விக்கெட்டை மட்டுமே இழந்து 227 ரன்களை குவித்தது.
குஜராத் அணி சார்பாக தொடக்க வீரர்கள் விரிதிமான் சாஹா 81 ரன்களையும், சுப்மன் கில் 94 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 228 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய லக்னோ அணியானது 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழந்து 171 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக குஜராத் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்த தோல்விக்கு பின் பேசிய குர்னால் பாண்டியா, “நாங்கள் அதிக ரன்கள் அடிக்க விட்டோம். 227 ரன்கள் அடிக்க வேண்டும் என்றால் அனைத்து ஓவர்களும் நாம் அதிரடியாக விளையாட வேண்டும். இதுவே 200 எண்கள் என்றால் நாம் ஒரு சில ஓவர்கள் அமைதியாக விளையாடலாம். ஆனால் 227 ரன்கள் இலக்கு என்ற போது அப்படி விளையாட முடியாது. ஆடுகளமும் கடைசி ஆறு ஏழு ஓவர்களில் கொஞ்சம் தோய்வாக இருந்தது. நாங்கள் 200 முதல் 210 ரன்களுக்கு குஜராத் அணியை நாங்கள் சுருட்டி இருந்திருக்க வேண்டும்.
எங்களுக்கு அதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஐபிஎல் தொடரில் ஒரு அணியின் கேப்டனாக நான் நியமிக்கப்படுவேன் என்று கனவில் கூட நான் நினைத்துப் பார்த்ததில்லை. அதுவும் ஹர்திக் கேப்டனாக நான் எதிர்கொள்வேன் என்றும் நினைக்கவில்லை. ஆனால் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். என் தாய் இந்த தருணத்தை நினைத்து மிகவும் சந்தோஷப்பட்டார்.
போட்டிக்கு முன்பு அவர் சொன்னது நீங்கள் இருவர்களில் யார் ஜெயித்தாலும் இரண்டு புள்ளிகள் நமது வீட்டுக்கு தான் வரும். எனவே மகிழ்ச்சியாக விளையாடுங்கள் என்று கூறினார். எனக்கும் என்னுடைய தம்பி ஹர்திக் பாண்டியாவுக்கும் அவ்வளவு பாசம் இருக்கிறது. களத்தில் நாங்கள் ஆக்ரோஷமாக மோதிக் கொண்டாலும் அது வெறும் இரண்டு நிமிடங்களில் முடிந்து விடும்” என்று தெரிவித்துள்ளார்.