டிக்கெட் பணம் திருப்பித் தரப்படும் : கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம்!
இந்தியா - தென் ஆப்பிரிகாவுக்கு இடையேயான 5வது கடைசியான முக்கியமான போட்டி பெங்களூருவிலுள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்திய அணி பேட்டிங் விளையாடிக்கொண்டிருந்த போது 3.3 ஓவரில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்படது.
இரவு முழுவதும் மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது. இந்தத் தொடர் 2-2 என்ற சமநிலையில் இருந்ததால் இந்தப் போட்டியை பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த கிரிக்கெட் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இறுதியில் இந்தத் தொடரினை இரு அணிகளும் சமமாக பகிர்ந்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டதன் காரணமாக ரசிகர்களின் டிக்கெட் கட்டணத்திலிருந்து 50 சதவீதம் திருப்பி அனுப்படும் என கர்நாடகா கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அம்மாநில கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,“இந்தியா தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான 5வது டி20 போட்டி மழையின் காரணமாக கைவிடப்படுகிறது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். விதிமுறைகளின்படி கிரிக்கெட்டில் ஒரு பந்து வீசினாலும் டிக்கெட் பணம் திருப்பித் தரப்படமாட்டாது.
இருப்பினும் கேஎஸ்சிஏ கிரிக்கெட் ரசிகர்களுக்காக டிக்கெட் பணத்தில் 50 சதவிகித பணத்தை திருப்பித்தர இருக்கிறது. அசல் டிக்கெட்டை கொண்டுவந்து பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். அதற்கான நடைமுறைகள் குறித்து விரைவில் தெரிவிக்கப்படும்” என கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.