ஆசிய கோப்பை 2025: யுஏஇ அணியை பந்தாடியது இந்தியா!
IND vs UAE, Asia Cup: ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய வீரர்கள் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், சிவம் தூபே 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினர்.
டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலாகலமாக தொடங்கியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில், குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஃப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம் மற்றும் ஹாங்காங் அணிகளும் இடம்பிடித்துள்ளன. இதனால் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
அதன்படி நேற்று நடைபெற்ற, தொடரின் இரண்டாவது லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீர அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸை வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ஐக்கிய அரபு அமீரக அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.
ஐக்கிய அரபு அமீரக அணிக்கு அலிஷன் ஷராஃபு - கேப்டன் முகமது வசீம் இணை நிதானமான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் ஷராஃபு 22 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து முகமது வசீமும் 19 ரன்களுக்கு நடையை கைட்டினார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களால் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
இதனால் அந்த் அணி 13.1 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 57 ரன்களில் ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், ஷிவம் தூபே 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா - ஷுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அபிஷேக் சர்மா 30 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.
Also Read: LIVE Cricket Score
இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷுப்மன் கில் 20 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 7 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன் மூலம் இந்திய அணி 4.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது. இந்த போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய குல்தீப் யாதவ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.