அஸ்வினின் சாதனையை முறியடித்த குல்தீப் யாதவ்!
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டி துபாயில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அந்த அணியில் அதிகபட்சமாக சௌத் ஷகீல் 62 ரன்களையும், முகமது ரிஸ்வான் 46 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை பூர்த்தி செய்துள்ளார்.
மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 300 விக்கெட்டுகளை வீழ்த்திய 13ஆவது வீரர் மற்றும் 5ஆவது சுழற்பந்துவீச்சாளர் எனும் பெருமையையும் அவர் பெற்றுள்ளார். மேற்கொண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிவேகமாக 300 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் குல்தீப் யாதவ் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார். இதன் மூலம் அவர் இப்பட்டியலில் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினையும் பின்னுக்கு தள்ளியுள்ளார்.
இதற்கு முன் ரவிச்சந்திரன் அஸ்வின் 173 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டிய நிலையில், தற்போது குல்தீப் யாதவ் 170ஆவது இன்னிங்ஸில் 300 விக்கெட்டுகளை எட்டி அவரை பின்னுக்கு தாள்ளியுள்ளார். இந்தப் பட்டியலில் முன்னாள் வீரர் கபில்தேவ் 146 இன்னிங்ஸ்களுடன் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுக்காக குறைந்த இன்னிங்ஸில் 300 சர்வதேச விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள்
- 146 - கபில் தேவ்
- 161 - முகமது ஷமி
- 169 - அனில் கும்ப்ளே
- 170 - குல்தீப் யாதவ்*
- 173 - ரவிச்சந்திரன் அஸ்வின்
- 181 - ஜஸ்பிரித் பும்ரா
Also Read: Funding To Save Test Cricket
இதுதவிர்த்து இந்தியாவுக்காக அதிக சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இர்ஃபான் பதானை பின்னுக்குத் தள்ளி குல்தீப் யாதவ் 12ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இதற்கு முன் இர்ஃபான் பதான் மூன்று வடிவங்களிலும் சேர்த்து 195 இன்னிங்ஸ்களில் 301 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், தற்போது குல்தீப் யாதவ் 163 போட்டிகளில் 170 இன்னிங்ஸ்களில் 302 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.