WI vs IND: ப்ளோரிடாவில் கடைசி இரண்டு டி20 போட்டிகள் நடைபெறுவது உறுதி!

Updated: Thu, Aug 04 2022 13:06 IST
Last two T20Is set to go ahead in Florida after both teams get USA visas (Image Source: Google)

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் பங்கேற்று வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களுடன் அட்டகாசமாக செயல்பட்ட இந்தியா 3 – 0 என்ற கணக்கில் வரலாற்றிலேயே முதல் முறையாக வெஸ்ட் இண்டீசை அதன் சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்து கோப்பையை முத்தமிட்டது. 

அதைத் தொடர்ந்து வரும் அக்டோபரில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் இவ்விரு அணிகளும் தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதி வருகிறது. இத்தொடரின் முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.

இத்தொடரின் முதல் மூன்று போட்டிகள் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற நிலையில், கடைசி இரண்டு போட்டி வெஸ்ட் இண்டீஸில் அல்லாமல் பக்கத்தில் உள்ள அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் இருக்கும் லாடர்ஹில் மைதானத்தில் நடைபெற உள்ளது. வரும் 2024ஆம் ஆண்டு நடைபெறும் ஐசிசி டி20 உலகக் கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய 2 கிரிக்கெட் வாரியங்களும் இணைந்து நடத்துவதற்கான உரிமையை பெற்றுள்ளன.

அந்த உலகக் கோப்பையின் ஆரம்ப கட்ட போட்டிகள் அமெரிக்காவில் உள்ள இந்த ஃப்ளோரிடா நகரில் இருக்கும் லாடர்ஹில் மைதானத்தில் தான் நடைபெற உள்ளது. எனவே அதற்கு வெள்ளோட்டம் பார்க்கும் வகையிலேயே இந்த தொடரின் கடைசி 2 போட்டிகளை அங்கு நடத்த இருநாட்டு வாரியங்களும் இணைந்து திட்டமிட்டு ஏற்கனவே அட்டவணையை அறிவித்துள்ளன. 

இந்நிலையில் அங்கு பயணிப்பதற்காக இரு நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்காக விண்ணப்பிக்கப்பட்டிருந்த விசாவுக்கு அமெரிக்க அரசு இன்னும் அனுமதி வழங்காமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளதாக தற்போது செய்தி வெளியானது. அந்த போட்டிகளுக்கு சில நாட்கள் மட்டுமே இடைவெளி இருந்த விசா கிடைப்பதற்கான தாமதமானதால் திட்டமிட்டபடி இரு அணிகளும் அமெரிக்காவுக்கு பயணித்து பயிற்சிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. 

இந்நிலையில் தற்போது இருநாட்டு கிரிக்கெட் அணி வீரர்களுக்கும் ப்ளோரிடா செல்வதாற்கான விசா கிடைத்துள்ளது. இதனால் திட்டமிட்டப்படி இத்தொடரின் கடைசி இரண்டு போட்டிகள் ப்ளோரிடாவில் நடைபெறும் என்பது உறுதியுள்ளது.

அதன்படி 4ஆவது டி20 போட்டி ஆகஸ்ட் 6ஆம் தேதியும், 5ஆவது டி20 போட்டி ஆகஸ்ட் 7ஆம் தேதியும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை